search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
    X

    தர்மபுரியில் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

    தர்மபுரியில் ஆஞ்சநேயர் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி எஸ்.வி. ரோட்டில் பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தருமபுரி நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். கோவிலில் சுரபி என்பவர் செயல் அலுவலராக உள்ளார்.

    இந்த கோவிலை சுற்றி நிலம் அபகரிப்பு தனிப்பிரிவு போலீஸ் நிலையம், ஊர்க்காவல் படை அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம், கிளை சிறைச்சாலை ஆகியவை அமைந்து இருப்பதால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, எஸ்.வி. சாலை பகுதி எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும்.

    அபய ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று இரவு பூசாரி பூஜையை செய்து விட்டு வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றார். இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கோவிலை திறக்க பூசாரி வந்தார்.

    அப்போது கோவிலின் முன்பு இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மர்ம நபர்கள் கோவிலின் வெளியே கிடந்த உண்டியலின் பூட்டை உடைத்து கொள்யைடிக்க வந்துள்ளனர். அவர்கள் முதலில் சி.சி.டி.வி. கேமிராவில் தங்கள் முகம் பதிவாகமல் இருக்க அதனை திருப்பி வைத்து உள்ளனர். பின்னர் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த செயல் அலுவலர் சுரபி கோவிலுக்கு வந்து பார்வையிட்டார். கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் பொதுமக்கள் கோவிலின் அருகே திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

    அதில் முகமூடி அணிந்து கொண்டு மர்ம நபர்கள் முதலில் சாலை விநாயகர்கோவிலில் உள்ள கேமிராவை குச்சி வைத்து திருப்பி உள்ளனர். அதன்பின்பு ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள கேமிராவை திருப்பி விட்டு உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை சென்றது தெரியவந்தது.

    வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உண்டியலை திறந்து பணம் எண்ணப்படும். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் உண்டியல் திறக்கப்பட்டது. தற்போது அந்த உண்டியலில் ரூ.45 ஆயிரத்திற்கு மேல் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    பரபரப்பாக இயங்கி வரும் எஸ்.வி. சாலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×