search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் திருடிய கார்கள் சென்னையில் விற்பனை- காட்பாடி வாலிபர் கைது
    X

    ஆந்திராவில் திருடிய கார்கள் சென்னையில் விற்பனை- காட்பாடி வாலிபர் கைது

    ஆந்திராவில் திருடிய கார்களை சென்னையில் விற்பனை செய்த காட்பாடி வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சித்தூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கார்கள் திருட்டு நடைபெற்றதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ராந்த்பட்டேல் பலமனேர் குற்றவியல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராம்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கார் திருட்டு கும்பலை பிடிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை சித்தூரை அடுத்த கங்காவரம் மண்டலம் தண்டலம்பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒன்றன்பின் ஒன்றாக 7 கார்கள் தொடர்ந்து வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கார்களை மடக்கி நிறுத்தினர். இதை பார்த்த காரில் வந்த 7 பேரும் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் 7 கார்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியபோது வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற குட்டி (வயது 32) என்பதும், இவர்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கார்களை திருடி, நம்பர் பிளேட், என்ஜின் எண் ஆகியவற்றை மாற்றி சென்னையில் உள்ள தனியார் கார் ஷோரூமில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 7 கார்களை போலீஸ் சூப்பிரண்டு விக்ராந்த் பட்டேல் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘தப்பி ஓடிய கார் திருட்டு கும்பலை சேர்ந்த 6 பேரும் விரைவில் பிடிபடுவார்கள்’ என்றார்.

    Next Story
    ×