search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் தேவை- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
    X

    காவிரி ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் தேவை- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. #CauveryManagementAuthority #CauveryIssue #CMAChairman
    புதுடெல்லி:

    காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரிலும் செயல்படுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான மசூத் உசைன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஆணையத்தின் பணிகள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



    “காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவரான மசூத் உசேன் பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே, அவர் ஆணைய தலைவராக நீடிப்பது பொருத்தமற்றது. மசூத் உசேன் இரட்டைப் பதவி வகிப்பதால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்க மத்திய நீர்வளத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தமிழக அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மசூத் உசேனை தலைவராகக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. ஆனால் அவரது தலைமையில் இயங்கும் காவிரி ஆணையமோ, அணை கட்ட அனுமதிக்க முடியாது என கூறியது. இவ்வாறு ஒரே தலைவரின் கீழ் இரட்டை நிலைப்பாடு எடுப்பதால் காவிரி ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கும்படி தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. #CauveryManagementAuthority #CauveryIssue #CMAChairman
    Next Story
    ×