search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் - மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
    X

    தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் - மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

    தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #MekedatuDamIssue #AssemblySpecialSession
    சென்னை:

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதி தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

    இந்நிலையில் தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். 
     
    அந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் பழனிசாமியும் பேசினார்.

    மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தினகரன், தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட பலர் ஆதரவளித்தனர். 

    இறுதியில், தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
     
    இதையடுத்து, சபாநாயகர் தனபால் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தார். #MekedatuDamIssue #AssemblySpecialSession
    Next Story
    ×