search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி பெண் டாக்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை: வங்கிகணக்கு-சொத்துக்கள் முடக்கம்
    X

    போலி பெண் டாக்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை: வங்கிகணக்கு-சொத்துக்கள் முடக்கம்

    திருவண்ணாமலையில் கடந்த 15 ஆண்டுகளாக கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #IllegalAbortionCenter
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில், புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி பங்களா வீட்டில், கருக்கலைப்பு நடந்ததை, மருத்துவக் கண்காணிப்பு குழுவினர் கடந்த 1-ந்தேதி நள்ளிரவு நடத்திய திடீர் சோதனையில் கண்டுபிடித்தனர்.

    கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் ஆனந்தி (51), அவரது கணவர் தமிழ்ச்செல்வன் (52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனந்தியின் சட்ட விரோத கருக்கலைப்பு மையம் செயல்பட்ட பங்களா வீடு சீல் வைக்கப்பட்டது.

    இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்ரவர்த்தி ஆகியோர் நேற்று இரவு ஆனந்தியின் பங்களா வீட்டில் வைக்கப்பட்ட சீல் உடைத்து, சோதனை நடத்தினர். 2,400 சதுர அடி பரப்பளவில், லிப்ட் வசதியுடன் கூடிய 3 அடுக்கு மாடி கட்டிடத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தபோது, பதுங்கு குழிகள் போன்ற ரகசிய அறைகள் இருந்ததும், மாடியில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:-

    சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தி ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டவர். எனவே, அவருக்கு அதிகபட்சமான தண்டனைகள் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு தொழிலில் ஆனந்தி ஈடுபட்டிருக்கிறார். சோதனை நடந்த அன்று மட்டும் 25 பேர் கருக்கலைப்புக்காக அப்பாய்ண்ட்மென்ட் பெற்றிருந்தனர்.


    மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கருக்கலைப்புக்காக இவரிடம் வந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக 19 ஆயிரம் சிசுக்களை கருவில் கலைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    ஆனந்தியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 இடங்களில் உள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆனந்தி, அவரது கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகன் பெயரில் உள்ள 9 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    ஆனந்தியின் பெயரில் இரண்டு ஆதார் எண்கள் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேறு ஏதேனும் வங்கிக்கணக்குகள், சொத்துக்கள் இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகிறோம்.

    ஆனந்தி நடத்தி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையத்துடன் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, இவரால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என முழுமையாக விசாரணை நடத்த, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர், டி.எஸ்.பி. ஆகியோர் உள்ளிட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 834 ஆக குறைந்திருப்பது வேதனையாக இருக்கிறது. எனவே, கருவுற்ற 4 மாதங்களுக்கு பிறகு ஸ்கேன் எடுப்பவர்கள், 2 குழந்தைகளுக்கு பிறகு கருவுற்று ஸ்கேன் எடுத்தவர்களுக்கு பிரசவம் நடந்ததா என சுகாதாரத்துறையினர் மூலம் கண்காணிக்கிறோம்.

    ஸ்கேன் சென்டர்களிலும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம் என்றார்.

    கருக்கலைப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக 3வது முறையாக ஆனந்தி கைது செய்யபட்டுள்ளார். இதனால் அவரை ஜாமீனில் வெளியில் வராதவாறு குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #IllegalAbortionCenter
    Next Story
    ×