search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணை கட்ட அனுமதி - மத்திய நீர்வள ஆணைய தலைவர் மீது தமிழக அரசு வழக்கு
    X

    மேகதாது அணை கட்ட அனுமதி - மத்திய நீர்வள ஆணைய தலைவர் மீது தமிழக அரசு வழக்கு

    மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த மத்திய நீர்வள ஆணைய தலைவர் மீது வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #MekedatuDam #TNGovt

    சென்னை:

    கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்திய கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது.

    இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீர்வள ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்ப்பாசனைத்துறைக்கு உத்தரவிட்டது.

    இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடை பெற்றது. கூட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவருமான மசூத் உசேன் தலைமை தாங்கினார்.

     


    இதில் தமிழக அரசு சார்பிலும், கர்நாடக அரசு சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார்.

    தமிழக அரசு தெரிவித்த நியாயமான மறுப்புகளை பரிசீலிக்காமலும் தமிழ்நாடு மற்றும் இதர படுகை மாநிலங்களின் அனுமதி பெறாமலும் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் தயாரிப்பதற்கு மத்திய நீர்வள பாசன ஆணையம் அனுமதி அளித்தது காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறும் செயலாகும். எனவே இந்த அனுமதியை ஆணையம் ரத்து செய்து திரும்ப பெற வேண்டும் என்று கூறி இருந்தார்.

    ஆனால் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் நிருபர்களிடம் கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. ஆனால் அணை கட்ட அனுமதிக்க வில்லை என்று கூறினார்.

    எனவே மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் முன்னுக்கு பின் முரணாக இங்கே ஒரு கருத்தும் அங்கே ஒரு கருத்தும் தெரிவித்து வருவதால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பதவி, மத்திய நீர்வள ஆணைய தலைவர் பதவி ஆகிய இரண்டு பதவியிலும் மசூத் உசேன் நீடிக்க கூடாது என்றும் ஏதாவது ஒரு பதவியில் தான் அவர் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளது.

    இதற்காக சட்டநிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. #MekedatuDam #TNGovt

    Next Story
    ×