search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல்
    X

    புயல் நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல்

    புயல் நிவாரணம் வழங்க கோரி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    கஜாபுயலால் பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் காலனி வீடுகள் என அனைத்து வீடுகளுக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வழங்க வேண்டு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் ,ரேசன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் 30 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெய்- வேட்டிசேலை மற்றும் அத்தியவசிய பொருட்கள் வாங்க ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், சேலம் 8 வழிச்சாலை நிலம் எடுப்பின் போது தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கியது போல் தென்னை மரம் ஒன்றுக்கு ரூ 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர், மன்னார் குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர், பேரளம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் இன்று மறியல் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், பெண்கள், விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி கீழப்பாலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் வீ.கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மன்னார்குடியில் மேலப்பாலம், கீழப்பாலம், காளவாய்க்கரை, சவளக்காரன், கோட்டூரில் தட்டாங்கோவில், ஆதிச்சபுரம், திருநெல்லிக் காவல், திருப்பத்தூர் களப்பல், பெருக வாழ்ந்தான், திருமக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடந்ததால் இதுகுறித்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் சமரச பேச்சு வார்த்தை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×