search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் பணி புறக்கணிப்பு
    X

    நாமக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் பணி புறக்கணிப்பு

    டாக்டர்கள் போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். #DoctorsStrike
    நாமக்கல்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்குவதைபோல் தமிழக அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்கிட வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்லில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் 70 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். இதில் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவரும் இன்று பணிகளை மேற்கொள்ளவில்லை.

    சிகிச்சை பெறுவதற்காக காலையில் வரிசையில் நின்று ஓ.பி.சீட் வாங்கிக்கொண்டு வந்த நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர்களின் அறை வெறிச்சோடி காணப்பட்டது.

    இருப்பினும் டாக்டர்களின் வருகைக்காக அங்கு நோயாளிகள் காத்திருந்தனர். ஆனால், காலை 10.30 மணியை தாண்டியும் டாக்டர்கள் யாரும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வராததால் என்ன செய்வது? என தெரியாமல் சிரமம் அடைந்தனர்.

    புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதுபோல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பு செய்தனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 21 டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் விடுப்பில் உள்ளார். மற்ற 20 டாக்டர்களும் பணிக்கு வந்திருப்பதாக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

    பணிக்கு வந்திருந்த டாக்டர்கள் வழக்கம்போல் அனைத்து வார்டுகளிலும் உள்ள உள்நோயாளிகள் பிரிவிலும் மற்றும் அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்தனர்.

    இந்த நிலையில் புறநோயாளிகளின் வருகை வழக்கத்தைவிட குறைந்த அளவில் காணப்பட்டது. வழக்கமாக காலை நேரங்களில் நூற்றுக்கணக்கான புறநோயாளிகள் நீண்ட வரிசையில் சிகிச்சைபெற காத்திருப்பார்கள். புறநோயாளிகளுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்காததால் புறநோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். #DoctorsStrike
    Next Story
    ×