search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணையை கட்டினால் தமிழகத்திற்குள் எந்தநாளும் மோடி வரமுடியாது - மு.க.ஸ்டாலின்
    X

    மேகதாது அணையை கட்டினால் தமிழகத்திற்குள் எந்தநாளும் மோடி வரமுடியாது - மு.க.ஸ்டாலின்

    மேகதாது அணையை கட்டினால் தமிழகத்திற்குள் எந்தநாளும் பிரதமர் மோடி வரமுடியாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MekedatuDam #DMK #MKStalin


    திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    1957-ல் நங்கவரம் போராட்டத்தில் விவசாயிகளுக்காக சுமார் 20 நாட்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் தலைவர் கருணாநிதி, முன்னெடுத்து போராட்டம் நடத்தினார். திருச்சியில் இருந்த குளித்தலையில் தான் நங்கவரம் போராட்டம் விவசாயிகளுக்காக கருணாநிதியால் நடத்தப்பட்டது.

    உழுதவனுக்கே நிலம் சொந்தம், நாடு பாதி, நங்கவரம் பாதி என்று விவசாயிகளுக்காக கருணாநிதி முழக்கமிட்டார். அப்போது திருச்சியில் இருந்த குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் முதன் முதலாக சட்ட சபைக்குள் கருணாநிதி நுழைந்து தனது கன்னிப்பேச்சில் நங்கவரம் போராட்டம் குறித்து பேசினார்.

    உழவனின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும், அதுதான் என்நோக்கம் என்று கூறினார். இன்று அதேபோன்று விவசாயிகளின் கண்ணீரை துடைக்க திரண்டுள்ளோம். தீரர்கள் நிறைந்த கோட்டமாம், திருச்சியை தேர்வு செய்து போராடுகிறோம். இது அரசியலுக்காக இல்லை.

    தேர்தலை எதிர்நோக்குவதற்காக இல்லை. தலைவர் கருணாநிதி கூறியபடி உழவனின் கண்ணீரை துடைப்பதற்காக நடைபெறும போராட்டம் இது. கஜா புயலில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஏற்கனவே தமிழகம் கண்ணீரில் தத்தளிக்கிறது. இந்த நிலையில் மேகதாது அணையை கட்டப் போகிறோம் என மத்திய அரசும், கர்நாடக அரசும் கூறுகிறது

     


    இயற்கை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் மத்திய அரசும், மத்திய மோடி அரசும், கர்நாடக அரசும், தமிழகத்தை வஞ்சிக்கிறது. காவிரி ஆறு கர்நாடகாவில் தோன்றினாலும், அது தமிழகத்தில்தான் அதிகம் பாய்கிறது. இந்த நிலையில் அங்கு புதிதாக மேகதாது அணையை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.

    இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. அப்போது முதல்வராக ஜெயலலிதா இருந்போதும் பிறகு, ஓ.பி.எஸ். இருந்தபோதும், பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும், இதில் தடை உத்தரவு பெற முடிந்ததா?

    இந்த விசயத்தில் தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி அரசு படுதோல்வி அடைந்து விட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தபோது இடைக்கால தடை உத்தரவு பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் கர்நாடக அரசு இப்படி துணிந்து செய்திருக்காது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலைத்துறையில் 10 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறும் வகையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

    எனவே இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்டடில் வழக்கு தொடர்ந்தார். இதில் உயர்நீதிமன்றமும் முகாந்திரம் உள்ளது, எனவே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

    உடனே எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்றார். ஆனால் காவிரி பிரச்சினையில இடைக்கால உத்தரவு பெற முடியவில்லை.

    மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக தடையை பெற உரிய மனுவை தாக்கல் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி அரசு தூங்கி கொண்டிருக்கிறது.

    இதற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி அரசு தான. கர்நாடக அரசு ஒரு திட்டாடதிற்கு அனுமதி கோரினால் தமிழகத்தின் கருத்தை முறையாக கேட்டிருக்க வேண்டும். மேகதாது அணையை கட்டி தண்ணீரை தேக்கினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்பதை தமிழக அரசு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

    ஆனால் அப்படி செய்யவில்லை. எனவே தான் நாங்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினோம். தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினோம். தமிழகத்திற்கு வரும் இந்த ஆபத்தை தடுக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இங்கு கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

    நியாயமாக இந்த போராட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கஜா புயலால் அங்கு பாதிப்பு ஏற்பட்டதால் திருச்சியில் நடத்துகிறோம்.

    திருச்சியிலும் டெல்டா உள்ளது. எனவேதான் இங்கு நடத்துகிறோம். தமிழகத்தை பா.ஜனதா அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு வெளியிட்ட புள்ளி விபரம் தவறு. மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். மற்ற மாநிலத்தில் இதுபோன்ற பேரிடர் நடந்திருந்தால் பிரதமர் செல்லாமல் இருந்திருப்பாரா?

    ஆனால் அவர் தமிழகத்திற்கு வரவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் அவர் வந்திருப்பார். இப்போதும் தமிழகத்திற்கு எதிர்பார்த்த நிவாரண தொகையை மத்திய அரசு வழங்குமா என்பது சந்தேகம் தான். பேரிடர் மேலாண்மை குழு தலைவராக பிரதமர் இருக்கிறார். முதல்வரும் அதில் உறுப்பினராக உள்ளார். ஆனால் தமிழகத்திற்கு போதுமான நிதி வழங்கப்படவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் உள்ளிட்ட புயல்களால் பாதிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.60 ஆயிரம் கோடி. ஆனால் மத்திய அரசு வெறும் 3 ஆயிரம் கோடிதான வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் ஆணையம் திட்டக்கமி‌ஷன் இருந்து என்ன பயன்?

    தமிழக மக்கள் எதற்காக மத்திய அரசுக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்க தோன்றுகிறது. இப்படி இருந்துகொண்டு தமிழகத்தில் தாமரை மலரும் என்கிறார்கள். புற்களே முளைக்காத போது தாமரை எப்படி மலரும். எனவே இதுபோன்ற நிலையை மத்திய அரசு தொடர்ந்தால் வைகோ, வீரமணி கூறியதுபோல் தமிழகத்திற்கு நரேந்திர மோடி வரமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

    மேகதாது அணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்க நினைத்தால் தமிழகத்திற்கு எந்தநாளும் மோடி வர முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #MekedatuDam #DMK #MKStalin

    Next Story
    ×