search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் விடுதி செயல்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு- கைதான சஞ்சீவ்
    X
    மகளிர் விடுதி செயல்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு- கைதான சஞ்சீவ்

    ஆதம்பாக்கத்தில் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் - உரிமையாளர் கைது

    சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AdambakkamHostel
    ஆலந்தூர்:

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்யும் பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி, தனியார் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

    இதனால் சென்னையில் புற்றீசல் போல் பெண்கள் விடுதிகள் முளைத்துக் கொண்டே உள்ளன.

    இதனை நடத்துபவர்களே பெண்களின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் அக்கறை காட்டாமல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.

    அந்த வகையில் சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் ஆபாச படம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதி நடத்தி வந்தவர் சஞ்சீவ்.

    இந்த விடுதியில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.

    இதற்கிடையே அறைகளில் சீரமைப்பு பணி என்ற பெயரில் சஞ்சீவ் சில வேலைகளை செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் விடுதியில் தங்குவதற்காக வந்தார்.

    அவர் வைத்திருந்த செல்போனில் மறைவாக வைக்கப்பட்டு இருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டு பிடிக்கும் ‘ஹைடன் கேமிரா, டிடெக்டர் ஆப்’ என்னும் செயலி இருந்தது.

    அதன் மூலம் அவர் விடுதி அறையில் ரகசிய கேமிராக்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது குளியல் அறை, படுக்கை அறை, துணிகள் தொங்கவிடும் கைப்பிடி உள்ளிட்ட இடங்களில் சிறிய வகை ரகசிய கேமிராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதனை கண்டு அங்கு தங்கி இருந்த இளம்பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். துணை கமி‌ஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரகசிய கேமிரா.

    இதையடுத்து போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமிராக்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக சஞ்சீவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏராளமான போலி ஆவணங்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான சஞ்சீவ் திருச்சியை சேர்ந்தவர். தாம்பரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார்.

    இவர் பெண்கள் தங்கும் விடுதி என்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இளம்பெண்களை சேர்த்துள்ளார். பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே விடுதி இருந்ததால் போக்குவரத்து வசதியை கருதி பெண்கள் இதில் தங்கி உள்ளனர்.

    சஞ்சீவிடம் இருந்து ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதால் அதனை அவருக்கு தயாரித்து கொடுத்தவர்கள் யார்? போலி ஆவணம் தயாரிக்கும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரகசிய கேமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் அழித்தனர். இந்த காட்சிகளை பதிவு செய்தது ஏன்? என்பது குறித்தும் சஞ்சீவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


    விடுதியில் தங்கி இருந்த பெண்கள் அனைவரும் நேற்று மாலையே அறைகளை காலி செய்து வேறு இடத்துக்கு சென்று விட்டனர். அனுமதி பெற்று செயல்படும் பாதுகாப்பான விடுதியில் தங்குமாறு அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இந்த இடத்தில் விடுதி செயல்படுவதே பலருக்கு தெரியாது. விடுதிக்கான எந்த அறிகுறியும் இல்லை. போர்டும் வைக்கவில்லை. இதுபோல் போலியாக செயல்படும் விடுதிகளில் பெண்கள் தங்கி பாதிக்கப்படக் கூடாது’ என்றனர்.  #AdambakkamHostel
    Next Story
    ×