search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணை பிரச்சனை: திருச்சியில் திமுக-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    மேகதாது அணை பிரச்சனை: திருச்சியில் திமுக-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

    மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி இன்று திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #MekedatuDam #DMK #MKStalin #Congress
    திருச்சி:

    கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது.

    இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார் . மேலும் தமிழக அரசு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு காவிரி நீர் வருவது ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டுவிடும். இதனால் டெல்டா மாவட்டங்களில் ஒருபோக நெல் சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதால் தமிழகத்தில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு விவசாய அமைப்புகளும் மத்திய அரசை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    இதற்கிடையே மேகதாது பிரச்சனை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கடந்த 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டியது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 9 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய அணை கட்டும் கர்நாடகாவின் விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப்பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

    மேலும் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி இன்று (டிசம்பர் 4-ந்தேதி, செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


    அதன்படி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பார்வர்டு பிளாக் கட்சி மாநில துணைப்பொது செயலாளர் வெங்கடேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.முக. தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    மேலும் இந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். #MekedatuDam #DMK #MKStalin #Congress
    Next Story
    ×