search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பழனி வருகை - சிலை மோசடி வழக்கில் சிக்கிய முக்கிய பிரமுகர்கள் பீதி
    X

    ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் பழனி வருகை - சிலை மோசடி வழக்கில் சிக்கிய முக்கிய பிரமுகர்கள் பீதி

    பழனி சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் இன்று மலைக்கோவில் வந்ததையடுத்து முக்கிய பிரமுகர்கள் மீண்டும் பீதி அடைந்துள்ளனர். #PonManickavel

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் சன்னதியில் போகரால் வடிவமைக்கப்பட்ட நவப்பாசாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன சிலை மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

    ஒரே கருவறையில் 2 சிலைகள் வைக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலை சில மாதங்களிலேயே உருமாறத் தொடங்கியது. இதனால் இந்த சிலை அமைத்ததில் முறைகேடு நடந்திருக்கலாம் என புகார்கள் எழுந்தன.

    இதனால் புதிதாக வைக்கப்பட்ட சிலை கருவறையில் இருந்து எடுத்து தனி அறையில் வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சிலை மோசடி குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனி கோவில் சிலை குறித்தும் விசாரணையை தொடங்கினார்.

    அவரது விசாரணையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலையில் மோசடி நடந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோவில் ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


    மேலும் புதிதாக சிலை செய்யப்பட்ட காலத்தில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் தங்கள் விசாரணை வளையத்திற்குள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கொண்டு வந்தார். சிலை மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் ராஜா, அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடுத்தடுத்து விசாரணை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.

    புதிதாக தயாரிக்கப்பட்ட ஐம்பொன்சிலை கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது. அடுத்தத்து பல்வேறு கோவில்களில் நடந்த சிலை கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதனால் சிலை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனிமேல் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு விடும் என நினைத்தனர். இதனிடையே பணி ஓய்வு பெற்ற ஐ.ஜி.பொன்மாணிக்க வேலை மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க அவர் ஓராண்டு பணியை தொடர தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதனையடுத்து நிலுவையில் உள்ள சிலை மோசடி வழக்கை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இன்று காலை 5 மணிக்கு பழனி மலைக்கோவிலுக்கு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வந்தார். விஞ்ச் மூலம் கோவிலுக்கு வந்த அவர் விஸ்வரூப தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினார். இதனால் பழனி சிலை மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் சிக்கியுள்ள முன்னாள் அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

    விரைவில் சிலை மோசடி குறித்த அடுத்த கட்ட விசாரணையை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #PonManickavel

    Next Story
    ×