search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி
    X

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Thangamani
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் ஆகியோர் கறம்பக்குடி, மழையூர், புதுக்கோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் நகர பகுதிகளில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. கிராம பகுதிகளில் 80 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் மின்சாரமும், ஊராட்சி பகுதிகளில் 40 சதவீதமும் வழங்கப்பட்டுவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்களை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வார காலத்திற்குள் 100 சதவீத மின்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும்.

    வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பணியாற்றும் மின்சார ஊழியர்களுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சில சம்பவங்கள் விபத்துக்கள் நடந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாரிய ஊழியர்களுக்கு தமிழக முதல்வரி டம் கலந்து பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு ஐந்தாம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் மின்சார கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய பணியாளர்களை அமைச் சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கந்தர்வக் கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோர் சந்தித்து அவர்களுடன் உணவருந்திய காட்சி.


    மின்வாரியத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது அரசின் கொள்கை முடிவு. இருப்பினும் அவர்களின் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலனை எடுக்கப்படும்.

    இயற்கை பேரிடரின் போது எவ்வாறு அவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடாக தற்போது பார்த்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மின் வாரிய ஊழியர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினர். #GajaCyclone #Thangamani
    Next Story
    ×