search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் காரணங்களுக்காகவே தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது- தம்பிதுரை
    X

    அரசியல் காரணங்களுக்காகவே தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது- தம்பிதுரை

    அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDuria #CentalGovt #GajaCyclone
    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று மக்களிடம் நேரில் குறை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய இடைக்கால நிவாரணம் போதாது. ஆகவே முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முதலில் கேட்ட ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க மீண்டும் வற்புறுத்துவார்கள்.

    விரைவில் பாராளுமன்றம் கூட இருக்கிறது. அங்கும் கஜா புயல் பாதிப்பு குறித்து குரல் கொடுப்போம். கர்நாடகத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வருவதால் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லாததால் அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மேலோங்கியுள்ளது. தேசிய கட்சிகளுக்கு இங்கு இடம் இல்லாத நிலை இருக்கிறது. எனவேதான் புறக்கணிக்கிறார்கள்.

    ஒவ்வொரு மாநில மொழியையும், கலாசாரத்தையும் மதித்து மத்திய அரசு நடக்க வேண்டும். அவர்களுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் உதவி செய்கிறார்கள். அதிகம் நிதி தருகிறார்கள். இது வருந்தத்தக்கது. இந்தியா ஒற்றுமையாகதான் இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

    தேசிய கட்சிகள் அரசியல் விருப்பு வெறுப்புகளை காண்பிப்பதால் மாநில உணர்வுள்ள கட்சிகள் வளர்ந்து வருகின்றன.


    தேசிய கட்சியான காங்கிரஸ் இப்போது 2 மாநிலங்களில்தான் ஆளுகிறது. அது மாநில கட்சியாக மாறும் நிலைமை இருக்கிறது. பா. ஜ.க.வும் காலப்போக்கில் மாநில கட்சியாக மாறிவிடும். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

    காவிரியில் எந்த அணையும் கட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இதனை உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நிவாரணம் வழங்குவதில் அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும். காவிரி பிரச்சனையில் தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது. காவிரி பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDuria #CentalGovt #GajaCyclone
    Next Story
    ×