search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த முதியவரின் உடலை சாலையில் வைத்து மறியல்- போலீசாரை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
    X

    இறந்த முதியவரின் உடலை சாலையில் வைத்து மறியல்- போலீசாரை கண்டித்து உறவினர்கள் போராட்டம்

    போலீசாரை கண்டித்து, இறந்த முதியவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
    தோகைமலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி க.புதூரை சேர்ந்தவர் முருகன்(வயது 66). இவர் கடந்த 11-ந்தேதி கடவூர் தரகம்பட்டி அருகே தென்னிலை ஊராட்சி பொசியம்பட்டியில் தனது அண்ணன் சீரங்கன் இறந்ததையொட்டி, 3-ம் நாள் துக்க காரியத்திற்கு சென்றார். அங்கு துக்க காரியம் நடந்தபோது, அதே ஊரை சேர்ந்த தங்கராசு என்பவர் முருகனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தனது அண்ணன் இறந்த துக்க காரியத்தில் தகராறு செய்ய வேண்டாம் என்று முருகன், தங்கராசுவிடம் கூறினார். அங்கிருந்த முருகன் உறவினர்களும் தகராறு செய்த தங்கராசுவை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த தங்கராசு தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை முருகன் உள்பட 5 பேரின் கண்களின் மீது தூவியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து முருகன் சிந்தாமணிபட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரனை நடத்தினர்.

    மேலும் தங்கராசுவும், தன்னை முருகன் தரப்பினர் அடித்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முருகன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த உமாபதி, குமார், கணேசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மிளகாய் பொடி பட்டதில் முருகனின் கண்பார்வை குறைந்ததால், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிந்தாமணிபட்டி போலீசார், முருகன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருவது அவருக்கு தெரியவந்தது.

    இதனால் தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக தங்கராசு அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்து தன்னையும், தனது தரப்பினரையும் போலீசார் தேடிவருகிறார்களே என்று மனவேதனையில் அரசு மருத்துவமனையில் இருந்த முருகன் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். பின்னர் க.புதூர் வீட்டிற்கு நேற்று முருகன் உடலை கொண்டு வந்த உறவினர்கள், இது குறித்து சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அங்கிருந்த போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகனின் மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் போலீசாரை கண்டித்து, தோகைமலை திருச்சி-மெயின் ரோட்டில் உள்ள க.புதூர் பஸ் நிறுத்தம் முன்பு முருகன் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகனின் உறவினர்கள், தங்கராசு உள்பட அவரது தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். முருகன் அளித்த புகார் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆவேசமாக கூறினர். இதையடுத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மாலை முருகன் உடலை திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் க.புதூர் பஸ் நிறுத்தம் முன்பு சாலையில் வைத்து மீண்டும் மறியல் போராட்டம் செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து முருகனின் உடலை உறவினர்கள் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×