search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி ஏடிஎம் கார்டு கொடுத்து ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.1 1/2 லட்சம் அபேஸ்
    X

    போலி ஏடிஎம் கார்டு கொடுத்து ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.1 1/2 லட்சம் அபேஸ்

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போலி ஏடிஎம் கார்டு கொடுத்து ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.1 1/2 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 70). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் சம்பவத்தன்று தனது ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.2 ஆயிரம் எடுக்க நெல்லிக்குப்பம் கடைத்தெருவில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் முருகேசன் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து, ரகசிய எண்ணையும் சொல்லி ரூ.2 ஆயிரம் எடுத்து கொடுக்கும்படி கேட்டார்.

    அதன்படி அந்த வாலிபரும் 2 ஆயிரம் ரூபாயை எடுத்து தந்துள்ளார். பின்பு அந்த வாலிபர் முருகேசனிடம் ஏ.டி.எம். கார்டை வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி முருகேசன் பணம் எடுப்பதுக்கு மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். கார்டை உபயோகப்படுத்த முடியவில்லை. இதனால் முருகேசன் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று ஏ.டி.எம். கார்டை அதிகாரியிடம் காண்பித்தார். அப்போது வங்கி அதிகாரி சோதனை செய்ததில் அந்த ஏ.டி.எம். கார்டு போலியானது என கூறியுள்ளார்.

    இந்த தகவல் அறிந்த முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். வங்கி கணக்கை பார்த்தபோது முருகேசனுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 38 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த பணம் கடைகளில் நகை மற்றும் பொருட்களை வாங்கி இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து முருகேசன் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் புகார் செய்தார். அதன்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம மனிதரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அந்த மர்ம மனிதரை பிடித்தனர். பின்னர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் வேலூரை சேர்ந்த அருண்குமார் என்பது தெரிய வந்தது. பின்னர் ஏ.டி.எம். கார்டு வைத்து என்னென்ன செய்தார்? என்பது குறித்தும், மேலும் இதுபோன்ற வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×