search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைரோடு அருகே அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
    X

    கொடைரோடு அருகே அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

    கொடைரோடு அருகே அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொடைரோடு:

    கொடைரோடு அருகே பள்ளபட்டி ஊராட்சியில் உள்ள கவுண்டன்பட்டி, ராமன் செட்டிபட்டி, கவுண்டன் பட்டி கிழக்கு தெரு ஆகிய ஊர்களுக்காக மயானம் அகரன்குளம் கண்மாய் அருகில் இருக்கிறது. இந்த மயானத்தின் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக இப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இது குறித்து தமிழக முதல்அமைச்சர், மாவட்ட கலெக்டர், நிலக்கோட்டை தாசில்தார், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளனர். மயானம் இடம் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற் கொண்டார். மயானம் இடத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் யாரும் வேலைக்கு செல்லாமல் அதிகாரிகள் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் மயான இடத்தை அளவிட அதிகாரிகள் யாரும் வரவில்லை.

    ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு மதுரை- வத்தலக்குண்டு செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மயான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    Next Story
    ×