search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    300 டன் எடை கொண்ட விஷ்ணு சிலை.
    X
    300 டன் எடை கொண்ட விஷ்ணு சிலை.

    300 டன் விஷ்ணு சிலையை பெங்களூர் கொண்டு செல்ல பணிகள் தீவிரம்

    வந்தவாசி அருகே 300 டன் விஷ்ணு சிலை பெங்களூர் கொண்டு செல்வதற்காக 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளனர்.
    வந்தவாசி:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் ஸ்ரீகோதண்டராம சாமி கோவில் உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோவிலில் மூலவர் ஸ்ரீகோதண்டராம சாமி, வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.

    இந்தக் கோவிலில் ஒரே கல்லினாலான சுமார் 64 அடி உயர, 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட ஸ்ரீவிஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், சாமி சிலை, ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான கல் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக் குன்றில் இருப்பது செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் கோவில் அறக்கட்டளை சார்பில், கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக்குன்றிலிருந்து பாறையை தோண்டி, வெட்டி எடுக்கும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கியது.

    சாமி சிலை செய்வதற்காக சுமார் 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட கல்லும், ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) செய்வதற்காக சுமார் 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரம் கொண்ட கல்லும் நவீன இயந்திரங்கள் மூலம் தோண்டி வெட்டி எடுக்கப்பட்டது.

    கடந்த 2016ம் ஆண்டு சாமி சிலை செய்வதற்காக தோண்டி வெட்டி எடுக்கப்பட்ட கல்லில் மட்டும் பெருமாளின் நடுமுகம், சங்கு, சக்கரம், கைகள் ஆகியவை செதுக்கப்பட்டன.

    மீதமுள்ள முகங்கள், கைகளை செதுக்கும் பணிகள் கற்பாறைகள் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் தொடங்கும் என தெரிவித்தனர்.

    இந்த 2 கற்களும் இரண்டு தனித்தனி கார்கோ லாரிகளில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். 160 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் சாமி சிலை செய்வதற்கான கல்லும், 96 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஆதிசே‌ஷன் சிலை செய்வதற்கான கல்லும் எடுத்துச் செல்ல பணிகள் நடந்தது.

    சாமி சிலை செய்வதற்கான கல் சுமார் 380 டன் எடை கொண்டதாக இருந்தது. இதனால் சாமி சிலையை லாரியில் ஏற்ற முடியவில்லை.

    இதனையடுத்து சாமி சிலையின் எடையை குறைக்க முடிவு செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பணிகள் நடந்தது. சாமி சிலையின் சுற்று பகுதியில் 80 டன் எடை குறைக்கப்பட்டது. தற்போது சிலை பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.

    சாமி சிலை லாரியில் ஏற்றப்பட்ட காட்சி.

    இதனை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று சாமி சிலை கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது. வந்தவாசி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஈரப்பதம் காணப்படுகிறது.

    இதனால் கொரக்கோட்டை மலை பகுதியில் இருந்து சாலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. லாரி செல்ல வழி ஏற்படுத்தி வருகின்றனர். பிரமாண்ட சிலை லாரியில் ஏற்றப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
    Next Story
    ×