search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தியூர் அருகே ரூ. 10 லட்சம் கேட்டு லாரி டிரைவர் கடத்தல் - 4 பேர் கைது
    X

    அந்தியூர் அருகே ரூ. 10 லட்சம் கேட்டு லாரி டிரைவர் கடத்தல் - 4 பேர் கைது

    அந்தியூர் அருகே ரூ. 10 லட்சம் கேட்டு லாரி டிரைவரை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    கோபி அருகே உள்ள தாழக்கொம்புவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 28). மெத்தை வியாபாரி.

    இவருக்கும் ஆப்பக்கூடல் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவரான வெங்கடேசனுக்கம் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மகா தேவனிடம் வெங்கடேசன் கூறினார். மகாதேவனும் பல தவணையாக ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை வெங்கடேசனிடம் கொடுத்தார்.

    ஆனால் பணத்தை வெங்கடேசன் இரட்டிப்பு செய்தும் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் தரவில்லை. அவரிடம் பல முறை மகாதேவன் கேட்டு பார்த்தார். ஆனால் அதற்கு பலன் இல்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கரட்டுபாளையத்தில் இருந்து அந்தியூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் வந்தார்.

    அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் வந்து கொண்டிருந்தபோது மகா தேவன் மற்றும் அவரது நண்பர்களான கோபி ஒட்டன்புதூரை சேர்ந்த கார்த்திகேயன் (29), கோபியை சேர்ந்த முகமது பஷீர் (27), திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த குமார் (28) ஆகியோர் காரில் அங்கு வந்தனர்.

    அவர்கள் வெங்கடேசனை கடத்தி சென்றனர். பின்னர் வெங்கடேசனின் மனைவி சுந்தரிக்கு போன் செய்து, ‘‘உனது கணவரை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க ரூ. 10 லட்சம் பணம் வேண்டும்’’ என்று கூறினர்.

    இதையடுத்து ஆப்பக் கூடல் போலீஸ் நிலையத்தில் சுந்தரி புகார் செய்தார். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து வெங்கடேசனை மீட்க பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி நேற்று இரவு கோபி அருகே வெங்கடேசனை மீட்டனர். அவரை கடத்திய மகாதேவன், கார்த்திகேயன், முகமது பஷீர், குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×