search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கடத்தல் தங்கம், ஹவாலா பணம் சிக்கியது - 5 பேர் கைது
    X

    சென்னையில் கடத்தல் தங்கம், ஹவாலா பணம் சிக்கியது - 5 பேர் கைது

    சென்னையில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கடத்தல் தங்கம் 7 கிலோ, ஹவாலா பணம் ரூ.11 கோடி சிக்கியது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். #HawalaMoney #Seized
    அடையாறு:

    சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அது கை மாற்றப்பட இருப்பதாகவும் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பிரிவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை குறிப்பிட்ட அந்த நட்சத்திர ஓட்டலின் வரவேற்பறையில் சாதாரண வாடிக்கையாளர்கள்போல் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது தொழில் அதிபர் ஒருவர் பெரிய தோல் பை ஒன்றை எடுத்துக்கொண்டு கார்கள் நிறுத்தும் இடம் நோக்கி வேகமாகச் சென்றார். அதைக்கண்ட அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அதில் தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் தங்க கட்டிகளை அவர் அதே ஓட்டலில் ஒரு அறையில் தங்கியிருக்கும் தென்கொரியாவைச் சேர்ந்த 2 பேரிடம் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட அறைக்குச் சென்ற அதிகாரிகள் வெளிநாட்டினர் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் ஹாங்காங்கில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததையும், கடந்த புதன்கிழமை இரவுதான் விமானம் மூலம் சென்னைக்கு வந்து, மயிலாப்பூர் ஓட்டலில் அறை எடுத்து தங்கியதையும் ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து, மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொழில் அதிபருக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் மற்றும் அவருடைய ஊழியர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய இந்த சோதனைகளில் மொத்தம் ரூ.11 கோடியே 16 லட்சம் ஹவாலா பணமும், 7 கிலோ தங்க கட்டிகளும் பிடிபட்டது. தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 20 லட்சம் ஆகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொழில் அதிபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் இதுபோன்று ஏற்கனவே தங்கம் கடத்தலிலும், மேலும் ஹவாலா பண பரிமாற்றத்திலும் பலமுறை ஈடுபட்டுள்ள திடுக்கிடும் தகவலும் தெரிய வந்தது.

    பிடிபட்ட 2 வெளிநாட்டினர், தொழில் அதிபர் மற்றும் அவரது ஊழியர்கள் இருவரையும் கைது செய்த மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney #Seized
    Next Story
    ×