search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் - பொன்.மாணிக்கவேல் பேட்டி
    X

    சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் - பொன்.மாணிக்கவேல் பேட்டி

    சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் என பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
    சென்னை:

    தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. அந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
     
    இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர்.

    இதற்கிடையே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்து அவர் இன்று பணி ஓய்வுபெறுகிறார். 



    இந்நிலையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது. 

    சிபிஐக்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதம். இன்றுடன் ஓய்வுபெறும் பொன். மாணிக்கவேல் மேலும் ஒரு ஆண்டு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாநில போலீசும், சிபிஐயும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். விசாரணை தொடர்பான அறிக்கையை வேறு எந்த ஒரு அதிகாரியிடமும் அவர் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் நேரடியாகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

    அவரை சிறப்பு அதிகாரியாக ஓராண்டு நியமனம் செய்வதற்கு தேவையான பணியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். சிலைக்கடத்தல் பிரிவு ஐஜியாக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் படிகள் என்னவோ அதனைத் தொடரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு திறம்பட செயல்பட முடியுமோ அவ்வளவு துரிதமாக செயல்படுவோம். எங்களுடைய விசாரணைக் குழு அப்படியே இருக்கும். அதில் எந்த ஒரு மாற்றமும் நிகழாது. அரசுக்காகத்தான் பணியாற்றுகிறோம். எங்களால் யாருக்கும் சிரமம் ஏற்படாது. ஒரு ஆண்டுக்குள் எனக்கான பொறுப்பை முடிப்பேன். ஒரு ஆண்டுக்குள் விசாரணையை முடித்து, உறுதியாக சிலைகளை கொண்டுவருவேன் என தெரிவித்துள்ளார். #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel 
    Next Story
    ×