search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் ஏராளமானோர் ராணுவத்தில் சேர வேண்டும்: நிர்மலா சீதாராமன்
    X

    பெண்கள் ஏராளமானோர் ராணுவத்தில் சேர வேண்டும்: நிர்மலா சீதாராமன்

    நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே ஏராளமான பெண்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். #BJP #NirmalaSitharaman
    சென்னை :

    சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ‘மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி கிளப்’ சார்பில் ரூ.95 லட்சம் மதிப்பிலான சிறந்த கல்வி மற்றும் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் குழும பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுவதுடன் மரத்தால் ஆன நாற்காலிகள், மேசைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த திட்டத்தின் மூலம் கற்றல் திறன் குறைபாடு உடைய மாணவிகளுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் ‘மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி கிளப்பின்’ கவர்னர் பாபு பேரம், தலைவர் ஆர்.எம்.நாராயணன், உலகளாவிய திட்டத் தலைவர் திவ்யா சித்தார்த், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யா பீடத்தின் செயலாளர் சுவாமி சுகதேவானந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-



    பெண்களுக்கு கல்வி என்பது புது சிந்தனை அல்ல. நம் நாட்டில் பெண்கள் கல்விக்கு எப்போதும் வாய்ப்பு இருந்து இருக்கிறது. குறிப்பாக வேதங்களில் பழமையான ரிக் முதலான வேதங்களை வழங்கியவர்களில் 22 பேர் பெண்கள். அந்த வகையில், சுவாமி ஸ்ரீ ராமகிருஷ்ணரே அன்னை சாரதா தேவியை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தார் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருந்திருக்க வேண்டும். எனவே, அறிவை வளர்ப்பதில் பெண்களின் பங்கு நம் நாட்டில் எப்போதும் இருந்து இருக்கிறது.

    எனவே, தற்போதைய நவீன கல்வி யுகத்தில், கல்வி கற்றல் குறைபாடு உள்ள மாணவிகளையும் சக மாணவிகளுடன் வைத்து கற்றுக் கொடுத்தால், அவர்களும் சமூகத்தில் சமமாக இருக்க முடியும். அதன் முதற்கட்டமாக அவர்களுக்கு என சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். படிக்கிற மாணவிகளுக்கு மட்டும் கல்வியை கொடுத்து நல்ல மதிப்பெண் வாங்கினார்கள் என்று கூறுவதை விட இதே போன்று கற்றல் குறைபாடு உள்ள மாணவிகளுக்கும் கல்வி கற்பிக்க முயற்சி எடுத்து உள்ளதை வரவேற்கிறேன்.

    தற்போது இது போன்ற உதவிகளை பெறும் மாணவிகளாகிய நீங்களும், இதனை மனதில் வைத்துக் கொண்டு பெரியவர்களான பிறகு உங்களுக்கான வாய்ப்புகள் வரும் போது இது போன்ற உதவிகளை செய்ய வேண்டும். அவரவரால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும். மாணவிகளுடன் ½ மணி நேரம் இருந்தாலும் நான் ஊக்கம் பெற்றதாக கருதுவேன். இன்று மாணவிகளுடன் அதிக நேரம் இருந்தமையால் முழு ஊக்கம் பெற்றதாக கருதுகிறேன்.

    14 லட்சம் எண்ணிக்கை கொண்ட நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே உங்களில்(மாணவிகள்) நிறைய பேர் ராணுவத்தில் சேர வேண்டும். இன்று பள்ளிக்கூட சீருடையில் பார்க்கும் உங்களில் நிறை பேரை இன்னும் 5 வருடங்கள் கழித்து விமானப்படை சீருடையிலோ, கப்பல்படை சீருடையிலோ, ராணுவ சீருடையிலோ பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர் மற்றும் சாரதா தேவி வேடம் அணிந்து இருந்த மாணவிகளுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியின் முன்னதாக சாரதா வித்யாலயா பள்ளி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #BJP #NirmalaSitharaman
    Next Story
    ×