search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண உதவிகள் கிடைக்காததால் 10 இடங்களில் மக்கள் சாலை மறியல்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண உதவிகள் கிடைக்காததால் 10 இடங்களில் மக்கள் சாலை மறியல்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்க கோரி 10 இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இதனால் கந்தர்வக்கோட்டை அருகே வேம்பன்பட்டி கிராமம் பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நிவாரண பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் கந்தர்வக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதேபோல் கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே உடையார்தெரு, பெரிய கடைவீதி, சின்ன அரிசிக்கார தெரு மற்றும் குமரன் காலனி, இந்திரா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வக் கோட்டை நகரத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கந்தர்வக்கோட்டை தாசில்தார் நேரில் வந்து நிவாரண பொருட்கள் வழங்க உறுதியளிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். ஆனால் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    அப்போது அந்த வழியாக வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை முறையாக அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் பிரித்து வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    அப்போது அமைச்சர் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான்கோட்டை கிராமத்தில் புயலால் குடிநீர், மின்சாரம் வழங்ககோரி ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் வடவாளம் காலனி பொதுமக்கள் குடிநீர் கேட்டு புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி சுற்று வட்டார கிராம பகுதியில் கஜா புயல் காற்றில் அதிக அளவில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்களும் சேதம் அடைந்துள்ளன. சீரமைக்கும் பணியில் மின்சாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் காற்று வலுவிழந்து 13 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும், எங்கள் கிராமத்தில் இருந்து அடுத்த கிராமத்திற்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    உடனே எங்கள் கிராமத்திற்க்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என கோரி அறந்தாங்கி அடுத்துள்ள கூத்தங்குடி பகுதி பொதுமக்கள் கட்டுமாவடி சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதேபோல் அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    அரிமளம் ஒன்றியம் செங்கீரையில் மின்வினியோகம் செய்யபடாததை கண்டித்து பொதுமக்கள் செங்கீரையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காசில் பழனி தெருவில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் அரிமளம் சிவன்கோவில் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    கறம்பக்குடி அருகே குரும்பிவயல் கிராமத்தில், ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். கஜாபுயலின் தாக்குதலால் அந்த கிராமத்தில் இருந்த அனைத்து குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

    இதனால் குடிநீர், மின்சாரம் இன்றி பல நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஜெனரேட்டர் மூலமும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தனி தீவாக உள்ள இந்த கிராமத்திற்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரும்பிவயல் பொதுமக்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அண்டக்குளம் அடுத்துள்ள கொப்பம்பட்டியில் கஜா புயலால் மரங்கள், மின் மாற்றிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தற்போது அப்பகுதி மக்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த 2 நாட்களாக அந்த தண்ணீரையும் நிறுத்தி விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு கொப்பம்பட்டி-செங்கிபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
    Next Story
    ×