search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி
    X

    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி

    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதால், அவை திசை மாறி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. வனத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால், குடியிருப்புக்குள் புகும் வனவிலங்குகளை கண்காணித்து விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

    கோத்தகிரியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் உள்ள காமராஜ் நகர், புதூர், சேலாடா உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி அடித்துக்கொன்று வருவதால், பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் நகரில் ஜெயபால், பாண்டியன், சேக் முகமது, கல்வி ஆகியோரது வீடுகளில் புகுந்து வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி கவ்வி சென்றது. கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தைப்புலி கடித்து காயப்படுத்திவிட்டு சென்றது. நேற்று முன்தினம் இரவு புதூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை அடித்துக்கொன்று, அட்டகாசம் செய்தது.

    முன்னதாக மதிய வேளையில் அளக்கரை செல்லும் வழியில் புதூர் விநாயகர் கோவில் அருகே உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர். பகலில் தேயிலை தோட்டங்களிலும், இரவில் குடியிருப்பு பகுதியிலும் தொடர்ந்து நடமாடி வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×