search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதிப்பு பகுதிகளில் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை- செல்லூர் ராஜூ தகவல்
    X

    புயல் பாதிப்பு பகுதிகளில் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை- செல்லூர் ராஜூ தகவல்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #gajacyclone #ministersellurraju

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சி தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய அலுவலகத்தில் மாவட்டத்தில் கஜா புயலினால் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பணிகளின் முன்னேற்றம் மற்றும் எடுக்கபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது

    இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டம் சிறப்பாக இயங்கி வருகிறது. ஏற்கனவே முதல்-அமைச்சர் உத்தரவின்படி முன்கூட்டியே 3 மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக்கடைகளில் இருப்பு வைக்கபட்டது. அந்த வகையில் அடுத்த மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய குடிமை பொருட்கள் இந்த மாதமே வாங்கி கொள்ளலாம். மேலும் விவசாயிகள் நிறைந்த மாவட்டமான இம்மாவட்டத்தில் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் சேருவதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற காலதாமதமானால், உடனடியாக வட்டார உதவி வேளாண்மை அலுவலரிடம் பயிர் சான்றிதழ் பெறலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் என்ற முறையில் அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து நிவாரண பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.

    கஜா புயலினால் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் பாதிப்புகள் இருந்தால் கடைகள் உடன் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவதுடன், மாற்றம் செய்யப்பட்ட கடைகளின் முகவரிகள் குறித்து பழுதடைந்த நியாயவிலைக்கடைகளில் குறிப்பிட வேண்டும்.

    நியாய விலைக்கடைகளில் பொருள் இல்லாத நிலை கவனிக்கப்பட வேண்டும். அவ்வாறு பொருள் இல்லாத நிலை கண்டறியப்பட்டால் உடனடியாக முன்னுரிமை அளித்து பொருள்கள் அந்த நியாய விலைக்கடைகளுக்கு முதலில் நகர்வு செய்யப்பட வேண்டும்.

    நியாய விலைக்கடைகளில் மின்சாரம் இல்லாத நிலையில் மின்னணு தராசில் பொருட்கள் எடையிட்டு பொருட்கள் வழங்க இயலாத நிலையில் சாதாரண எடை தராசு, மேடை தாராசு கொண்டு பொருட்களை எடையிட்டு வழங்கலாம். இம்மாவட்டத்தினை பொறுத்த வகையில் 529 முழு நேர நியாய விலை கடைகளும், 142 பகுதி நேர நியாய விலை கடைகளும் உள்ளன. இவைகள் அனைத்தும் கட்டாயம் திறந்திருக்க வேண்டும், அனைத்து பொருட்களும் தடையின்றி மக்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #gajacyclone #ministersellurraju

    Next Story
    ×