search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை- 4 பேருக்கு வலைவீச்சு
    X

    நெல்லையில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை- 4 பேருக்கு வலைவீச்சு

    நெல்லையில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி என்ற டோனி பாண்டி (வயது32). இவர் அங்கு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்றிரவு 7 மணியளவில் இவர் சி.என்.கிராமம் ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தார்கள். அவர்கள் திடீரென்று அரிவாளால் இசக்கி பாண்டியை வெட்டினார்கள். அவர்களிடம் இருந்து உயிர் பிழைக்க இசக்கி பாண்டி தப்பியோடினார். ஆனால் அந்த 3 பேரும் அவரை சுற்றி வளைத்து சரமாரி வெட்டினர்.

    சம்பவம் நடந்த இடம் எப்போதும் பரபரப்பாக ஆட்கள் நடமாடும் இடம் என்பதால் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இசக்கி பாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சுகுணாசிங், உதவி கமி‌ஷனர் கிருஷ்ணசாமி, சந்திப்பு இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இதில் ‘திடுக்’ தகவல்கள் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

    மதுரையை சேர்ந்த தங்கமணி என்பவர் சமீபத்தில் சி.என்.கிராமம் வந்து குடியேறினார். அவர்களுடன் பலியான இசக்கி பாண்டி மற்றும் அவரது சகோதரர்கள் நெருங்கி பழகினார்கள். அப்போது தங்கமணி, இசக்கிபாண்டி சகோதரர்களுக்கு ரூ.1 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

    அந்த பணத்தை இசக்கி பாண்டியும், அவரது சகோதரர்களும் வட்டிக்கு கொடுத்து, அந்த வட்டியை தங்கமணிக்கு கொடுத்து வந்தனர். கடந்த சில மாதங்களாக வட்டி பணம் பிரியாததால் அவர்கள் தங்கமணிக்கு பணம் கொடுக்கவில்லை.

    இது தங்கமணியின் ஆதரவாளர்களான அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது சகோதரர் பேச்சிமுத்து ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்பிரமணியனும், பேச்சிமுத்துவும், இசக்கி பாண்டி மற்றும் அவரது சகோதரர்களிடம் அடிக்கடி பணத்தை கேட்டு வந்தனர்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று சுப்பிரமணியன், பேச்சிமுத்து, மானூர் ரஸ்தாவை சேர்ந்த மூக்காண்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து இசக்கி பாண்டியை சரமாரி வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியன் அவரது தம்பி பேச்சிமுத்து, மூக்காண்டி உள்பட 4 பேர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படையினர் நேற்றிரவு முழுவதும் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கொலையாளிகள் சிக்கவில்லை. அவர்கள் அருகில் வேறு எங்காவது தலைமறைவாக உள்ளார்களா? என்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    கொலை செய்யப்பட்ட இசக்கி பாண்டியின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இன்று பிரேத பரிசோதனை நடந்தது. ஆஸ்பத்திரி வளாகத்தில் அவரது மனைவி ஜெயலட்சுமி, மகள்கள் மல்லிகா, தேவி மற்றும் உறவினர்கள் ஏராளமானவர்கள் திரண்டு நின்று கதறி அழுதனர். அவர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாத வாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சி.என்.கிராமம் பகுதியிலும் 2 தரப்பினரும் மோதலில் ஈடுபடாதவாறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×