search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவர் தற்கொலை- தந்தை குற்றச்சாட்டு
    X

    ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவர் தற்கொலை- தந்தை குற்றச்சாட்டு

    நாமக்கல் பள்ளியில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல், மோகனூர் ரோட்டில் டிரினிட்டி நகரில் டிரினிட்டி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த திருச்சி மாவட்டம் துறையூர், இந்திரா நகரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மகன் அம்பிகானந்தன் (வயது 15) நேற்று பள்ளியிலேயே தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு:-

    மாணவரின் தந்தை ராமமூர்த்தி திருச்சி பெல் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற அவர் துறையூரில் உள்ள அகத்தியர் சண்மார்க்க சங்கத்தில் சேர்ந்து அங்கேயே தங்கியிருந்தார்.

    இதற்கிடையே வீட்டிற்கு சென்ற அம்பிகானந்தன் தான் படிக்கும் பள்ளியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்றும், துறையூரில் வீட்டருகே உள்ள பள்ளியில் சேர்த்து விடுமாறும் கொஞ்சியுள்ளார். ஆனால் அதனை பெற்றோர் கண்டு கொள்ளவில்லை என்றும் இதனால் மனம் உடைந்த மாணவர் பள்ளியிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

    இந்தநிலையில் இன்று காலை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த மாணவரின் தந்தை பரபரப்பு புகார் கூறினார், அதன் விவரம் வருமாறு-

    எனது மகன் தற்கொலை செய்ததாக பள்ளியில் இருந்து கூறிய உடனே பதறி அடித்த படி நான் பள்ளிக்கு ஓடி வந்தேன். ஆனால் பள்ளி நிர்வாகம் நான் வரும் முன்பே எனது மகன் உடலை அவசரம், அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர்.

    அவனுக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்யும் அளவுக்கு விவரம் கிடையாது, அவனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு விட்டு அதனை மறைக்க நாடகமாடுகின்றனர்.

    எனது மாணவனுக்கு அந்த பள்ளியில் படிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதையறிந்த நான் பள்ளி நிர்வாகத்திடம் அந்த ஆசிரியரை மாற்ற கேட்டு பல முறை முறையிட்டேன். ஆனாலும் இதுவரை அந்த ஆசிரியரை மாற்றவில்லை.

    அதனால் எனது மகனை நான் பறி கொடுத்துள்ளேன். எனது மகன் சாவுக்கு அந்த ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தான் முழு காரணம். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அப்போது அங்கு வந்த பள்ளி நிர்வாகத்தினரிடம் ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். ஆனாலும் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    மாணவன் சாவுக்கு ஆசிரியர் தான் காரணம் என அவரது தந்தை புகார் கூறி உள்ளதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி அதிகாரிகள் விரைவில் பள்ளியில் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×