search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை மாவட்டத்தில் மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு
    X

    நாகை மாவட்டத்தில் மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு

    நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். #GajaCyclone #CentralCommittee

    நாகப்பட்டினம்:

    புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக மத்தியக் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் வந்துள்ளனர்.

    இந்தக்குழுவில் மத்திய நிதித்துறை(செலவினங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின்(ஐதராபாத்) இயக்குனர்(பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத் சவா, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சை வந்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உளூர், நெய்மேலி, புலவன் காடு, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருவாரூரில் இருந்து புறப்பட்ட மத்தியக் குழுவினர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினர். பின்னர் இன்று காலை ஓட்டலில் அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் 8.45 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், தங்கமணி, சரோஜா, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    முதலாவதாக வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்று மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தனர். பின்னர் அங்கு இந்திராணி என்பவர் குடிசை வீட்டின் மீது தென்னை மரம் விழுந்து சேதமாகி உள்ளது அதனை பார்வையிட்டு அவர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டனர்.


    பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வரும் துணைமின் நிலையத்தை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கே கூடி நின்றவர்கள் மத்தியக் குழுவினரிடம் புயல் பாதிப்பில் இருந்து விரைவில் மீளமுடியாத நிலைமைக்கு நாங்கள் உள்ளோம். எங்கள் தொழில் அனைத்தும் முடங்கி உள்ளது. பல வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். அரசு தான் இதை கவனத்தில் கொண்டு எங்களுக்கு கூடுதல் நிவாரணம் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    அவர்களுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து சென்ற குழுவினர் வேட்டைகாரனிருப்பு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டனர். அவர்களிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா? சாப்பாடு தரமாக உள்ளதா? என்று கேட்டனர்.இதையடுத்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை மத்தியக் குழுவினர் சாப்பிட்டு ருசி பார்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மரங்கள் சாய்ந்து கிடக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பெண்கள் சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டு எங்கள் வாழ்வாதாரம் அழிந்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.

    அதைத் தொடர்ந்து கோவில்பத்து கிராமத்திற்கு சென்று அங்கு சேதமாகி உள்ள செல்போன் கோபுரங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் கழக சேமிப்பு கிடங்கு ஆகியவை பார்வையிட்டனர். அந்த பகுதியில் சேதங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

    அங்கிருந்த புறப்பட்ட குழுவினர் கோடியக்கரை பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் வீடுகளை பார்வையிட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டும் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது மீனவர்கள் எங்களுக்கு கூடுதல் நிவாரணம் ஒதுக்க வேண்டும். அதிகாரிகள் இந்த பகுதியை வந்துபார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பெரிய குத்தகை, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர் அங்கிருந்து விழுந்த மாவடி சென்ற குழுவினர் அங்கு சேதமடைந்த படகுகள், வலைகளை பார்வையிட்டனர். அப்போது கூடுதல் நிவாரணம் இருந்தால் மட்டுமே எங்கள் வாழ்க்கை தொடர முடியும். மேலும் புதிய படகுகள் அரசு வழங்க வேண்டும் என்று கூறினர். #GajaCyclone #CentralCommittee

    Next Story
    ×