search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் சேதம் அடைந்த தஞ்சை, திருவாரூரில் மத்திய குழு ஆய்வு: விவசாயிகள், பெண்கள் கண்ணீர் மல்க முறையீடு
    X

    புயலால் சேதம் அடைந்த தஞ்சை, திருவாரூரில் மத்திய குழு ஆய்வு: விவசாயிகள், பெண்கள் கண்ணீர் மல்க முறையீடு

    கஜா புயலால் சேதம் அடைந்த தஞ்சாவூர், திருவாரூரில் மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. நிவாரணம் வேண்டி விவசாயிகள், பெண்கள் கண்ணீர் மல்க முறையிட்டனர். #Gaja
    தஞ்சாவூர்:

    கஜா புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கிருந்து நேற்று இரவு தஞ்சை வந்து சங்கம் ஓட்டலில் தங்கினர். இன்று காலை 8.30 மணி அளவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் இருந்து மத்திய குழுவினர் புயல் சேத பகுதிகளை பார்வையிட புறப்பட்டு சென்றனர்.

    முதலில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதூர் பகுதியில் புயலால் சேதமான பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். புயலால் குடிசை வீடுகளை இழந்த விவசாயிகள், பெண்களிடம் சேத விவரங்களை கேட்டனர். அப்போது விவசாயிகளும் பெண்களும் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எனவே அரசு நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

    இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் சேதமான தென்னை மரங்களை பார்வையிட்டனர். அப்போது தென்னை விவசாயிகள் மத்திய குழுவினரிடம் கூறும்போது, ‘‘ புயல் சேதத்தால் இதுவரை இந்த பகுதியில் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அரசு அறிவித்த நிவாரணம் எங்களுக்கு போதாது. எனவே கூடுதல் நிவாரணம் வழங்க வேண் டும். 20 ஆண்டுகள் பின்னோக்கி எங்களது வாழ்க்கை சென்று விட்டது. இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதையடுத்து விவசாயிகள் கருத்துகள், மற்றும் சேதமான தென்னை மரங்கள் விவரங்களை மத்திய குழுவினர் குறிப்பெடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து புலவன் காட்டில் சேதமான துணை மின்நிலையத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் நெம் மேலி திப்பியகுடி பகுதிக்கு சென்று சேதமான நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டனர்.

    இதையடுத்து ஆலடி குமுளை பகுதிக்கு மத்திய குழுவினர் சென்று சேதமான சாலைகளை புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்த்தனர். பட்டுக்கோட்டை உளூர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டனர். பின்னர் மல்லிபட்டினம், சென்று சேதமான மீனவர்களின் படகுகளை பார்வையிட்டனர். விசைபடகு, நாட்டு படகு மீனவர்கள் மத்திய குழுவினரிடம் கூறும்போது, படகுகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது. கூடுதல் நிவாரண தொகையை அளிக்க வேண்டும். சுமார் 400 படகுகளுக்கு மேல் சேதமாகி உள்ளது என்று வேதனையுடன் தெவித் தனர். இதையடுத்து முத்துப் பேட்டை பகுதிக்கு சென்று புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.



    மாலை 4 மணி அளவில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட செல்கிறார்கள். அங்கு புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு விட்டு இரவு 8 மணிக்கு திருவாரூரில் இருந்து நாகை புறப்பட்டு செல்கிறார்கள். இரவு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இக்குழுவினர் தங்குகிறார்கள்.

    நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்துவிட்டு இரவு புதுச்சேரி செல்கின்றனர்.
    Next Story
    ×