search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்
    X

    7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகியிருக்கும் 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். #MinisterJayakumar #Governor
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘கஜா’ புயல் பாதிப்பு விவகாரத்தில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப, மத்திய குழு தமிழகம் வந்திருக்கிறது.

    மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணத்தை தமிழகம் கோரியிருக்கிறது. தமிழகம் வந்த மத்திய குழுவிடம் புயல் சேத விவரங்கள் தெளிவாக எடுத்து கூறப்பட்டிருக்கிறது. அவர்களும் அந்த விவரங்களை குறித்துக்கொண்டனர். ஆய்வு விவரங்களையும் அதனுடன் சேகரித்து மத்திய அரசுக்கு அவர்கள் எடுத்துக்கூற இருக்கிறார்கள். நிவாரணத்தில் உடனடி தேவை, நிலைத்த நீடித்த வாழ்வாதாரம் என்று இரு வகை உண்டு. எனவே தமிழகம் கேட்டுக்கொண்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- பாதிப்பு விவரத்தை குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு மீது அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

    பதில்:- ரூ.15 ஆயிரம் கோடி என்று சேதம் குறித்த திட்ட மதிப்பீடு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த தொகையை மத்திய அரசு வழங்கினாலே போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் நன்றாக உதவிட முடியும். இடையில் நிவாரண பணி பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவே ரூ.1,000 கோடியை தமிழக அரசு விடுவித்தது.

    அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது.

    விமர்சனம் செய்பவர்கள் செய்துகொண்டு தான் இருப்பார்கள். பிரதமரை, முதல்-அமைச்சர் சந்திக்காவிட்டால், ஏன் சந்திக்கவில்லை? என்பார்கள். சந்தித்துவிட்டால், இதை முன்பே செய்திருக்கலாமே... என்பார்கள். இந்த நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை.

    இந்த அரசை ‘போற்றுவோர் போற்றட்டும்’, ‘தூற்றுவோர் தூற்றட்டும்’. எனவே விமர்சனம் செய்கிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. குற்றம் சொல்வதே வேலையாக உள்ளவர்களை பற்றி எங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அரசியல் செய்யவேண்டும் என்று நினைத்தால் சட்டசபை இருக்கிறது. அங்கே வைத்துக்கொள்ளலாம், வாருங்கள். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசியல் செய்யவேண்டாம் என்பது தான் எங்கள் வேண்டுகோள்.

    கேள்வி:- ‘முதல்-அமைச்சரின் ஹெலிகாப்டர் ஆய்வு ஒரு தூரத்து பார்வை’ என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறாரே?

    பதில்:- கமல்ஹாசன் ஒரு குழந்தை. அவர் ‘ஏரியல் சர்வே’ என்பதை பற்றி முதலில் படிக்கவேண்டும். பேரிடர் காலத்தில் பாதித்த பகுதிகளை ‘ஏரியல் சர்வே’ எடுக்க பிரதமரோ, முதல்-அமைச்சரோ விமானத்தில் சென்று ஆய்வு செய்வது காலங்காலமாக நடந்து வரும் நிகழ்வு. விமானத்தில் மட்டுமல்ல, நிலத்திலும் கால் வைத்து நிவாரண பணிகளிலும் ஈடுபட்டார். இதையெல்லாம் எண்ணி பார்க்காமல் அவர் குழந்தைத்தனமாக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர் இன்னும் ‘களத்தூர் கண்ணம்மா’ ஸ்டைலிலேயே இருக்கிறார்.

    அழுகிற குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். அந்தவகையில் தான் ‘கஜா’ புயல் பாதிப்பில் களப்பணியாற்றி வருகிறோம்.

    கேள்வி:- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லையே?

    பதில்:- கவர்னரை பொறுத்தவரையில் அந்த 3 பேர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து விசாரித்திருக்கிறார். அனைவரும் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்கள். எந்த ஒரு உள்நோக்கம் இல்லாத நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பதாலும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்திருப்பதாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானமே நிறைவேற்றியது. இது தமிழக மக்களின் உணர்வும் கூட. ஆனால் அதற்காக நாம் கவர்னரை கட்டாயப்படுத்தவே முடியாது. தமிழக அரசின் தீர்மானத்தை கவர்னர் நிச்சயம் பரிசீலித்து, விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.



    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி ஒரு முதுகெலும்பு இல்லாத முதல்-அமைச்சர் என்று வைகோ கூறியிருக்கிறாரே?

    பதில்:- அவர் நியூராலஜி டாக்டரா? எங்கள் எல்லாருக்கும் முதுகெலும்பு உண்டு. அவருக்கு தான் இல்லை.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். #MinisterJayakumar #Governor

    Next Story
    ×