search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரியில் பஸ்கள் மீது கல்வீச்சு - பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேர் கைது
    X

    குமரியில் பஸ்கள் மீது கல்வீச்சு - பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேர் கைது

    குமரியில் பஸ்கள் மீது கல்வீச்சு தாக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி தரிசனம் செய்யச் சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் அவமதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள அரசை கண்டித்து நேற்று குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் சீராக நடைபெறவில்லை. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    முழு அடைப்பு போராட்டத்தின்போது நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் 12 அரசு பஸ்கள் மற்றும் ஒரு கல்லூரி பஸ் கல்வீசி தாக்கப்பட்டது. இதுதொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்களில் பம்மம் சிறிய காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (26), ராஜேஷ் (38) ஆகிய ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மார்த்தாண்டம் பம்மம், உண்ணாமலைக்கடை பகுதியில் பஸ்களை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரும் பா.ஜனதா பிரமுகர்கள் ஆவர். அவர்களை போலீசார் குழித்துறை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கல் வீச்சு தொடர்பாக மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பஸ் உடைக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    Next Story
    ×