search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்த காட்சி.
    X
    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்த காட்சி.

    மன்னார்குடி அருகே பொன்.ராதாகிருஷ்ணன் காரை மறித்து மக்கள் வாக்குவாதம்

    மன்னார்குடி அருகே இன்று காலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காரை மறித்து பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Gajacyclone #PonRadhakrishnan
    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உணவு, மின்சாரம், குடிநீர் இல்லாமல் கடந்த 8 நாட்களாக கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் சாலை மார்க்கமாக வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளின் காரை வழிமறித்து வாக்குவாதம் செய்தும் வருகின்றனர். கோபத்தில் உச்சத்தில் இருந்து வரும் மக்களை சமாதானப்படுத்த முடியாமல் அதிகாரிகளும் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 33-வது வார்டு பகுதிக்கு இன்று வரை மின்சாரம் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இன்று காலை அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த மின்வாரிய ஊழியர்களிடம் நெடுவாக்கோட்டையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை கொண்டு வந்து உடனடியாக எடுக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரில் சென்றார். புயலால் சேதமான வேதாரண்யம் பகுதிகளை பார்வையிடுவதற்காக அவர் காரில் சென்றார்.

    பொன்.ராதாகிருஷ்ணன் வந்த காரை பொதுமக்கள் திடீரென மறித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    உடனே பொன்.ராதா கிருஷ்ணன் காரை விட்டு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பொதுமக்கள், ‘‘எங்களுக்கு மின் கம்பங்கள் கொடுக்கும் வரை நாங்கள் யார் காரை விடமாட்டோம் என சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே பொதுமக்களை சமாதானப்படுத்திய பொன். ராதாகிருஷ்ணன் மின்கம்பங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை ஏற்று மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் வேதாரண்யத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். #Gajacyclone #BJP #PonRadhakrishnan
    Next Story
    ×