search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரகேடு
    X

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதாரகேடு

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படும் நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுவரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்க ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நின்றால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளேயே வெவ்வேறு இடங்களில் கழிவுநீரும் மழைநீரும் தேங்கியுள்ளது. தொடர்ந்து பலநாட்கள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற ஆஸ்பத்திரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்ற வேண்டிய பொறுப்பு நகராட்சி நிர்வாகத்திற்கு தான் உள்ளது என்று கூறும் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள்ளேயே தேங்கி நிற்கும் கழிவுநீரையும் மழைநீரையும் அகற்றாமல் பாராமுகமாகவே உள்ளது ஏன் என்று தெரியவில்லை.

    தூய்மை இந்தியா திட்டம் மாவட்டம் முழுவதும் முறையாக கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்திவரும் மாவட்ட நிர்வாகம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் துப்புரவு பணி முறையாக நடைபெறுகிறதா? அரசு வழங்கியுள்ள வசதிகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பது குறித்தும் எவ்வித ஆய்வும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

    எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு ஆஸ்பத்திரியின் அன்றாட நடைமுறைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×