search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் கோபத்துடன் உள்ளனர்- சீமான் குற்றச்சாட்டு
    X

    புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் கோபத்துடன் உள்ளனர்- சீமான் குற்றச்சாட்டு

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாங்க முடியாத துயரத்தோடு ஆட்சியாளர்களின் மீது கொந்தளிக்கும் கோபத்தில் மக்கள் உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். #GajaCyclone #Seeman
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு நிவாரணப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறிவருகிறார். அப்போது சீமான் கூறியதாவது:-

    கஜா பெரும்புயல் ஏற்படுத்தியிருப்பது மிகப்பெரிய பேரழிவு. காவிரி நதிநீர் சிக்கலால் மாற்று பயிராகத் தென்னையை நம்பியிருந்த டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் 15 முதல் 50 ஆண்டுகால மரங்களை இழந்து பரிதவிக்கின்றனர்.

    இதுவரையில் அதிகாரிகளோ அமைச்சர்களோ நேரிடையாக ஆய்வு செய்து இழப்பை முழுமையாக மதிப்பிடவில்லை! பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவில்லை. மத்திய அரசு கஜா புயல் பேரழிவை ஒரு இடராகவே கருதவில்லை, முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டது.

    அதிகாரிகளோ அமைச்சர்களோ பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக இதுவரை நேரில் பார்வையிடவில்லை. தாங்கமுடியாத துயரத்தோடும் ஆட்சியாளர்களின் மீது கொந்தளிக்கும் கோபத்தோடும் மக்கள் உள்ளனர். பாதிக்கப்பட்ட எங்களை உடனடியாகப் பார்க்காமல் இந்த அரசு கைவிட்டுவிட்டது என்ற நம்பிக்கை இழப்பு தான். அதற்கு காரணம்.

    கவலைதோய்ந்த முகத்தோடும் கண்ணீரோடும் நம் தாய், பாட்டி வயதுடையவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு எங்களுக்கு எதுவுமில்லை இப்படித் தெருவில் நிற்கிறோம் என்று கதறும்போது ஏற்படுகின்ற வலியை சொல்லில் அடக்கமுடியாது. ஏராளமானோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

    கஜா பெரும்புயலால் தமிழகத்தின் வளமான பாதி நாடு அழிந்துவிட்டது என்றே கூறலாம். 7 மாவட்டங்களும் வளமான மாவட்டங்கள். இதிலிருந்து தான் சோறும் நீரும் வந்தது. எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். ஆனால் மத்திய அரசு இதை ஒரு இழப்பாகவே கருதவில்லை. இதில் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வரி வேறு நாங்கள் கட்டவேண்டும். வாய்க்கும் வயிற்றுக்கும் கஞ்சி இல்லை, மாற்றி உடுத்திக்கொள்ளத் துணியும் இல்லை, இடிந்த கூரையை இழுத்துக்கட்ட முடியவில்லை எப்படி ஜி.எஸ்.டி. வரிகட்டுவார்கள்? வேளாண் பெருங்குடிமக்கள் பெற்ற வங்கி கடனையெல்லாம் ரத்துச் செய்யவேண்டும்.

    விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தவே இலட்சக்கணக்கில் செலவாகும் போது எப்படி அவர்களால் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவரமுடியும். எனவே தமிழக அரசு, நேரில் வந்து ஆய்வு செய்து முழுமையான பாதிப்பை வெளியிட்டு மத்திய அரசிடமிருந்து உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுத்து டெல்டா பகுதி மக்கள் மீண்டுவர வாய்ப்புக்கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Seeman
    Next Story
    ×