search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்பு: திருத்துறைப்பூண்டி- மன்னார்குடியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு
    X

    கஜா புயல் பாதிப்பு: திருத்துறைப்பூண்டி- மன்னார்குடியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தட்டான்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற கவர்னர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலைமையை கேட்டறிந்தார். #GajaCyclone #Banwarilalpurohit
    திருவாரூர்:

    கஜா புயல் தாக்கியதில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நாகை வந்தார்.

    புயலால் பாதித்த நாகை மற்றும் வேளாங்கண்ணி, வேதாரண்யம், சாலை வழியாக காமேஸ்வரம், விழுந்த மாவடி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.


    திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தட்டான்கோவில் உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலைமையை கேட்டறிந்தார். அப்போது பெண்கள் கண்ணீர் மல்க கவர்னரிடம் தங்கள் படும் அவலநிலையை எடுத்து கூறினர்.

    இதை கேட்டுக் கொண்ட கவர்னர், அவர்களுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து புறப்பட்டார்.

    பின்னர் மன்னார்குடி அருகே காசாங்குளம், சேரி, கோட்டூர், கோட்டூர் தோட்டம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு தங்கள் குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை சந்தித்தும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.

    அப்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இந்த புயல் எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து விட்டது. நாங்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு நிவாரண பணி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

    இதனை கேட்டுக் கொண்ட கவர்னர் அதிகாரிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன். தொடர்ந்து உங்கள் பகுதிக்கு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும் என்றார்.

    இதன் பின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். மீட்பு பணிகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று அவர்களிடம் கவர்னர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து திருவாரூரில் உள்ள அரசினர் மாளிகைக்கு சென்ற கவர்னர் அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு பின் பிற்பகலில் மீண்டும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட புயலால் சேதமான பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்கிறார். #GajaCyclone #TNGovernor #Banwarilalpurohit

    Next Story
    ×