search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னவாசல் பகுதிகளில் 5-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பொதுமக்கள் குற்றச்சாட்டு
    X

    அன்னவாசல் பகுதிகளில் 5-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பொதுமக்கள் குற்றச்சாட்டு

    அன்னவாசல் பகுதியில் கஜா புயலால் 5-வது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
    அன்னவாசல்:

    கஜா புயல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இந்த பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள், பொது வழிபாட்டு தலங்கள் மற்றும் சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. புயலுக்கு தப்பிக்க முடியாமல் வீடுகளில் உள்ள மேற் கூரைகள் சேதம் அடைந்தன. ஊருக்குள் மற்றும் காடு வயல் வெளிகளில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதனால் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதிகளில் 5-வது நாளாக நேற்றும் மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை.

    மேலும் குடிநீர் வினியோகம் ஒரு சில பகுதிகளில் முற்றிலுமாக கிடைக்கவில்லை. இதனால் பல கிராமங்களில் தண்ணீருக்காக பொதுமக்கள் காலிகுடங்களுடன் காத்துக்கிடக்கின்றனர். மின்சார வினியோகம் இல்லாததால் செல்போன்கள், டார்ச்லைட் போன்ற உபகரணங்களுக்கு சார்ச் போட முடியாமல் அப் பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களில் உள்ள கரும்பு, வாழை, தென்னை, தேக்கு மரங்கள் முழுவதும் சாய்ந்தன. பள்ளிகூடங்களில் உள்ள மரங்களும் சாய்ந்து கிடக்கின்றது. ஓட்டு வீடு, குடிசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அன்னவாசல் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட பல கிராம பகுதிகளுக்கு பார்வையிட எந்த அதிகாரிகளும் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிப் படைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து முதலிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன் கூறுகையில், புயல் தாக்கி 5 தினங்கள் ஆகியும் எங்களது ஊரை சுற்றியுள்ள வேளாம்பட்டி, காந்துப்பட்டி, முதலிப்பட்டி ஆலவயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு எந்த ஒரு அதிகாரிகளும் வர வில்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்றார்.

    மாங்குடியை சேந்த அஞ்சலை கூறுகையில், எனது ஓட்டு வீட்டில் ஓடுகள் அனைத்தும் காற்றில் பறந்துவிட்டது. நான் இந்த புயலில் தப்பித்ததே இறைவனின் செயல். ஆனால் 5 நாட்கள் ஆகியும் இதுவரை கிராம நிர்வாக அதிகாரி கூட இந்த பகுதியை வந்து பார்க்கவில்லை. எங்களது ஊருக்கு பஸ் வந்து ஐந்து நாட்கள் ஆகிறது என்றார்.

    பெருமநாட்டை சேர்ந்த பெரியையா கூறுகையில், எனக்கு 80 வயது ஆகிறது எனது ஆயுசுக்கு இதுபோன்ற ஒரு புயலை பார்த்தது இல்லை. பலத்த காற்று வீசியபோது எனது வீட்டில் ஓடுகள் அனைத்தும் மளமளவென கீழே விழுந்தன. என் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீட்டின் மூலையில் அமர்ந்து கொண்டேன் என்றார்.
    Next Story
    ×