search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் டெல்லி பயணம் புயல் நிவாரண நிதிக்கா? அரசியல் காரணமா? - தினகரன் கேள்வி
    X

    முதல்வர் டெல்லி பயணம் புயல் நிவாரண நிதிக்கா? அரசியல் காரணமா? - தினகரன் கேள்வி

    முதல்-அமைச்சர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா? அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலின் கோர தாண்டவத்தால் நிலைகுலைந்து போயுள்ள டெல்டா மாவட்டங்களில், ஆறு நாட்களாகியும் மக்கள் உணவின்றி, குடிநீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

    கடந்த இரண்டு நாட்களாக, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தபோது, பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரி கூட தங்களை காண வரவில்லை என்று மக்கள் கதறுகின்றனர்.

    இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டரில் பறந்து வந்த முதல்வர், வானிலையை காரணம் காட்டி திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்லாமலேயே திரும்பியுள்ளார். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் சில பயனாளிகளுக்கு மட்டும் நிவாரண உதவி வழங்கிவிட்டு பறந்துவிட்டார்.



    தற்போது, முதல்-அமைச்சர் பிரதமரை நாளை சந்தித்து புயல் நிவாரண நிதி கோர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

    நூற்றுக்கணக்கான கிராமங்களில், பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த அவர்களது நிலங்களையும், வீடுகளையும், கால்நடைகளையும், உடமைகளையும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட வந்து பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதல்வர் நிவாரண நிதியை கோர இருக்கிறார்? மிகப் பெரிய இயற்கை பேரிடர் நடந்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து இடைக்கால நிவாரண நிதி கோராதது ஏன்?

    பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறியாமல், இழப்புகளை மதிப்பீடு செய்யாமல், அவசர அவசரமாக முதல்-அமைச்சர் டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    Next Story
    ×