search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட இசக்கிசங்கர்.
    X
    கொலை செய்யப்பட்ட இசக்கிசங்கர்.

    நெல்லை அருகே கவுரவ கொலை செய்யப்பட்ட வங்கி ஊழியரை காதலித்த கல்லூரி மாணவி தற்கொலை

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே கவுரவ கொலை செய்யப்பட்ட வங்கி ஊழியரை காதலித்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #HonourKilling
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி சங்கர் (வயது33). இவருக்கு திருமணமாகவில்லை. களக்காட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இசக்கிசங்கர் தினமும் அதிகாலையில் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று குளிப்பது வழக்கம். அதுபோல் நேற்றும் மோட்டார் சைக்கிளில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு குளிக்க சென்றார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஆற்றுக்கு சென்ற போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. உயிர் பிழைக்க இசக்கி சங்கர் தப்பியோடினார்.

    ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரி வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இசக்கி சங்கர் பலியானார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் அம்பை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கொலைக்கான காரணம் குறித்து ‘திடுக்’ தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட இசக்கி சங்கரும், வெள்ளங்குழியை சேர்ந்த தளவாய் என்பவரது மகள் சத்திய பாமா (21) என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். சத்திய பாமா, பாபநாசம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இருவரது சமூகத்தை சேர்ந்தவர்களும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதல் ஜோடியான இசக்கி சங்கரும், சத்திய பாமாவும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்.

    இருவரும் ‘நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக வாழ்வோம். இல்லையேல் ஒன்றாகவே சாவோம்’ என்று கூறினர். இது தொடர்பாக இரு சமுதாய பெரியவர்களும் ஒன்றாக கூடி சமரசம் பேசினார்கள். இதனால் இசக்கி சங்கர் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார்கள்.

    சத்திய பாமாவின் பெற்றோரும், கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்போம் என்றும், அதுவரை இருவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினர். இந்த நிலையில் நேற்று காலை இசக்கி சங்கர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    சமரசம் பேசுவது போல் பேசி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பது போல் தெரிவித்து அவரை கவுரவ கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அம்பை போலீசார் வெள்ளங்குழி பகுதியை சேர்ந்த சிலரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இசக்கி சங்கர் கொலை செய்யப்பட்டதை அறிந்த சத்திய பாமா கதறி துடித்தார். நேற்று கல்லூரிக்கு செல்லாமல், வீட்டில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவரது பெற்றோரும் இரண்டு நாட்கள் கழித்தால் சரியாகி விடும் என்று அமைதியாக இருந்தனர்.


    இந்நிலையில் மாணவி சத்தியபாமா இன்று அதிகாலை வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவரது உடல் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கதறி துடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்திற்கு வீரவநல்லூர் போலீசார் விரைந்து சென்று மாணவி சத்தியபாமாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த சத்திய பாமா ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என்றும் அந்த பகுதியில் சோதனை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இரண்டு பிரிவினர்களுக்கு இடையேயும் மோதல் ஏற்படாதவாறு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  #HonourKilling

    Next Story
    ×