search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை கையகப்படுத்துவதில் தாமதம்
    X

    ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை கையகப்படுத்துவதில் தாமதம்

    தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும் ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. கையகப்படுத்தும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. #Jayalalithaa #JayaProperty #Sasikala
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், இதனால் அவரிடம் இருந்து அபராதம் வசூலிக்கத் தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    ஜெயலலிதா, சசிகலா உள்பட குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் 155 சொத்துக்களை அரசு கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அவர்களது 155 சொத்துக்களை கைப்பற்றுமாறு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவுப்படி இந்த சொத்துக்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடருமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் கடிதம் எழுதியது. அதன் நகலை மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பியது.

    சொத்துக்களை அடையாளம் கண்ட பிறகு வருவாய் அதிகாரிகள் அந்தந்த இடங்களில் இது தமிழக அரசுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகைகள் வைப்பார்கள். இந்த சொத்துக்கள் தொடர்பாக எந்தவித பரிமாற்றத்தையும் அனுமதிக்க கூடாது என்று பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் கோர்ட்டு சொத்து மதிப்பு ரூ.53.60 கோடி என்று நிர்ணயித்து அதன் அடிப்படையில் தீர்ப்பளித்தது. தற்போது இதன் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.



    தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும் இந்த சொத்துக்களை கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. கையகப்படுத்தும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.

    கையகப்படுத்தும் சொத்துக்களில் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகியவை குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி அவரது பூர்வீக சொத்து என்பதால் அது அவரது வாரிசுகளுக்கு சொந்தமாகும் என்று கூறப்படுகிறது. #Jayalalithaa #JayaProperty #Sasikala
    Next Story
    ×