search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை விரைந்து செய்ய வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்
    X

    டெல்டா மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை விரைந்து செய்ய வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நிவாரணப்பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Mutharasan
    மன்னார்குடி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோட்டூர், திருப்பத்தூர், திருக்களார், மீணம்பநல்லூர், களப்பாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 4 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. எனவே பொதுமக்கள் வாய்க்கால், குளத்தில் உள்ள நீரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சுகாதாரம், குடிநீருக்கு மாநில அரசு முன்னுரிமை கொடுத்து துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஆயிரக்கணக்கான மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்து விட்டதால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் விநியோகம், சமையல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற முடியவில்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாடு அரசு, அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாத மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க, வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், மற்றும் பணியாளர்கள் அழைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வி.தொ.ச மாநில செயலாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ கே.உலகநாதன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் பாஸ்கர், கோட்டூர் ஒன்றியசெயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர். #GajaCyclone #Mutharasan
    Next Story
    ×