search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் கடைவீதி பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட போது எடுத்தபடம்
    X
    திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் கடைவீதி பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட போது எடுத்தபடம்

    திருவோணம்-திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    திருவோணம், திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர். #GajaCyclone
    திருவோணம்:

    கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டகங்கள் அதிக சேதத்தை சந்தித்துள்ளது. மேலும் கஜா புயல் வந்து சென்று 4 நாட்கள் ஆன நிலையிலும் பெரும்பாலான பகுதிகளில் அடிப்படை வசதியே இல்லாமல் மக்கள் இருந்து வருகின்றனர்.

    சேதமான இடங்களில் அதிகாரிகள் வந்து பார்வையிடுவது இல்லை. சேதமான பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று டெல்டா பகுதி மக்களிடையே கடும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் மக்கள் முற்றுகையிட்டும், சாலைமறியலில் ஈடுபட்டும் வருகின்றனர். அரசு சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

    இந்த நிலையில் திருவோணம் பகுதியில் புயல் காரணமாக அதிக அளவில் வாழை, தென்னை, சவுக்கு, தேக்கு மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் என்று பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது 4 நாட்கள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கவில்லை என்று மக்கள் கூறிவருகின்றனர்.

    மின் இணைப்பு இல்லாமலும், குடிநீர் வசதி இல்லாமலும், உணவு கூட இல்லாமலும் இருந்து வருகிறோம் என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறிவருகின்றனர். திருவோணம் மற்றும் கரியா விடுதி, வெட்டுவாக்கோட்டை, ஊரணிபுரம், பணிகொண்டான் விடுதி, காடுவெட்டி விடுதி, காவாளிப்பட்டி, கட்டுவான்பிறை, நெய்வேலி உள்ளிட்ட சுற்று புறங்களில் ஏற்பட்ட சேதத்தை இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து பார்வையிடவில்லை என்ற கோபத்திலும் மக்கள் இருந்து வருகின்றனர்.

    ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிட்டால் தான் நாங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியவரும் ஆனால் இது வரை எந்த அதிகாரிகளும் வரவில்லை என்பதை கண்டித்து இன்று ஊரணிபுரம் கடை வீதியில் மக்கள் திடீரென திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் இது குறித்து அவர்கள் கூறும் போது, அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதே போன்று அருகே திருவோணம் அருகே உள்ள நம்பிவயல், மூனுமாங்கொல்லை ஆகிய பகுதிகளிலும் அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதே போல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியிலும் நிவாரண உதவிகள் வழங்காததை கண்டித்தும் பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.நிவாரண உதவிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #GajaCyclone
    Next Story
    ×