search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கியை அடுத்து மறமடக்கியில் விவசாயிகள் சாலை மறியல் செய்தபோது எடுத்தபடம்.
    X
    அறந்தாங்கியை அடுத்து மறமடக்கியில் விவசாயிகள் சாலை மறியல் செய்தபோது எடுத்தபடம்.

    புயல் பாதிப்பை பார்க்க அதிகாரிகள் வராததால் போலீசாரை சிறைப்பிடித்த பொதுமக்கள்

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மறமடக்கியில் புயல் பாதிப்பை பார்க்க அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை சிறைப்பிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மறமடக்கியில் ‘கஜா’ புயல் தாக்கியதால் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான தேக்கு மரங்கள், பலா மரங்கள், மா மரங்கள், வாழை மரங்கள், முருங்கை மரங்கள் உள்ளிட்ட பல ஆயிரம் மரங்கள் சாய்ந்து விட்டன.

    முற்றிலும் இந்த மரங்களில் காய்க்கும் காய், பழங்களை வாழ்வாதாரமாக கொண்ட விவசாயிகள் கஜா புயலால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளனர். சொத்துக்களை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மறமடக்கி பகுதி விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மறமடக்கி செல்லவில்லை. மேலும் சேத பாதிப்புகளை கணக்கிட அதிகாரிகளும் செல்லாத நிலையில், மறமடக்கியில் மொத்தம் 2 ஆயிரம் மரங்களுக்குள் தான் சேதம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாக மறமடக்கி பகுதி விவசாயிகளுக்கு தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நேற்று மறியல் செய்வதற்காக மறமடக்கி கடைவீதியில் கூடினர். அப்போது அந்த பகுதியில் போலீஸ் ஜீப் மற்றும் வேனில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் எதேச்சையாக வந்தனர்.

    உடனே விவசாயிகள் அவர்களை சிறைபிடித்தனர். தொடர்ந்து மறமடக்கியில் இருந்து செல்லும் 4 சாலைகளிலும் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த மரங்களுக்கு தீ வைத்து எரித்தனர். சாலையில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை மறித்து கருப்பு கொடி கட்டினர்.

    காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை போலீசார் சிறை வைக்கப்பட்டிருந்த தகவல் அறந்தாங்கி ஆர்.டி.ஓ. பஞ்ச வர்ணத்திற்கு தெரியப்படுத்தியும் அவர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வராததால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா விவசாயிகளிடம், மறமடக்கியில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதுடன் போலீசாரை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×