search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது நாய் இறைச்சியா?- இன்று மாலை தெரியும்
    X

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது நாய் இறைச்சியா?- இன்று மாலை தெரியும்

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான இறைச்சி என்பது இன்று மாலை தெரிய வரும். #DogMeat #DogMeatinChennai
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் 2190 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பார்சலில் அனுப்பப்பட்டிருந்த இந்த இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது அது அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதனை தொடர்ந்து இறைச்சி அனைத்தையும் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.

    எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பார்சல்களில் இருந்தவை தோல் உரிக்கப்பட்ட நாயின் தோற்றத்தில் நீண்ட வாலுடன் காணப்பட்டது. இதையடுத்து வெளி மாநிலத்தில் இருந்து நாய்களை அடித்து கொன்று அதனை பார்சலில் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    இந்த நாய் இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் ஆடு மற்றும் மாட்டுக் கறியுடன் கலந்து சமைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    சென்னைவாசிகளை பொருத்தவரையில் பெரும்பாலானோர் வார இறுதி நாட்களில் அசைவ ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகவே வைத்துள்ளனர். குறிப்பாக மட்டன் பிரியாணியை ஓட்டல்களில் பலர் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் மாட்டுக் கறி உணவும் சென்னையில் விருப்ப உணவு போலவே ஆகிவிட்டது.

    துரித உணவகங்களிலும், ஓட்டல்களிலும் மாலை நேரங்களில் மாட்டுக்கறியை (சில்லி பீப்) விரும்பி சாப்பிடுவர்கள் அதிகம். இதுபோன்ற அசைவ பிரியர்களுக்கு நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக இனி, அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்குதானோ? என்கிற எண்ணமும் மக்கள் மனதில் பரவலாக தோன்றி உள்ளது.

    சென்னையில் நாய் இறைச்சி பிடிபட்டதாக வெளியான தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் பரபரப்பாகவே பரப்பப்பட்டு வருகிறது. இது பொது மக்கள் மத்தியில் ஓட்டல்களில் பரிமாறப்படுவது நாய்கறி தானோ? என்கிற சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. மட்டன் பிரியாணியில் தெரியாத அளவுக்கு நாய் கறி கலக்கப்படுவதாகவும், இதனால் அது வெளியில் தெரிய வாய்ப்பு இல்லை என்றும் பேசப்படுகிறது.

    பொது மக்கள் மத்தியில் நிலவும் இந்த அசைவ உணவு சந்தேகங்களையும், அச்சத்தையும் போக்கும் வகையில் எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவு இன்று மாலையில் வர இருப்பதாகவும் அதன் பின்னரே பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான இறைச்சி என்பது தெரிய வரும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


    பொது மக்கள் மத்தியில் நாய் கறி தொடர்பான பீதி நிலவுவதால், எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகை இறைச்சி? என்பது பற்றி சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரிவான அறிக்கையை அளிக்க உள்ளனர்.

    அதில் பொது மக்களின் பீதியை அடக்கும் வகையில் தகவல்கள் இருக்குமா? இல்லை நாய் இறைச்சி தான் என்று உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று வெளியாக உள்ள அறிக்கையில் அதற்கான விடை கிடைத்து விடும்.

    இதற்கிடையே நாய்க்கறி தொடர்பாக சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுடன் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது. #DogMeat #DogMeatinChennai
    Next Story
    ×