search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை தீர்த்த குளத்தில் குதித்து பெண் தற்கொலை
    X

    அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை தீர்த்த குளத்தில் குதித்து பெண் தற்கொலை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை தீர்த்த குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் அருகே சிவகங்கை தீர்த்த குளமும், கால பைரவர் சன்னதி அருகில் பிரம்ம தீர்த்த குளமும் உள்ளது. இந்த குளங்களில் பக்தர்கள் இறங்க முடியாத அளவில் சுற்றி வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் சிவகங்கை தீர்த்த குளத்தின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென குளத்திற்கு செல்லும் படிகளில் இருந்த இரும்புக்கேட்டில் ஏறி தாண்டி குளத்திற்குள் குதித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிலில் இருந்த பக்தர்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து குளத்தில் இறங்கி பெண்ணை மீட்டனர்.

    அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண் இறந்து விட்டதாக கூறினர். அந்த பெண்ணுக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குளத்தில் குதித்து உயிரிழந்த பெண் யார்? என்றும், எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இளம்பெண் உடலை மீட்ட பின்னர் சிவகங்கை தீர்த்த குளத்தில் பரிகார பூஜை செய்யப்பட்டது.

    Next Story
    ×