search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் கஜாபுயலில் 2 ஏக்கர் வாழை நாசம்- விவசாயி தற்கொலை
    X

    திருச்சியில் கஜாபுயலில் 2 ஏக்கர் வாழை நாசம்- விவசாயி தற்கொலை

    திருச்சியில் கஜா புயல் தாக்கியதில் 2 ஏக்கர் வாழை சேதம் அடைந்ததால் மனமுடைந்த விவசாயி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான ஏக்கர் நெல், கரும்பு, வாழை கடுமையாக பாதிக்கப்பட்டது. வாழை பயிர்கள் குலை விட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.

    இந்த நிலையில் கஜா புயலால் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், அந்த நல்லூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் நிலப்பரப்பில் குலைவிட்டு காய் காய்த்திருந்த நிலையில் இருந்த பல ஆயிரம் ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

    சேதம் அடைந்த வாழை நெல், கரும்பு பயிர்கள் கணக்கிட்டு பணியை திருச்சி மாவட்ட நிர்வாகம் தொடங்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 2 ஏக்கரில் நடப்பட்டிருந்த வாழை முற்றிலுமாக கஜா புயலில் சிக்கி நாசமாகி விட்டதை பார்த்த திருச்சி மேல கொண்டயம்பேட்டையைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 29) என்ற விவசாயி நேற்று இரவு கொண்டயம்பேட்டை ரெயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.

    அங்குள்ள தனியார் தண்ணீர் கேன் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே விவசாயத்தையும் செல்வராஜ் பார்த்து வந்தார். நேற்று மாலை வயலுக்கு சென்று விட்டு வாழை பயிர்களை பார்த்து வேதனை அடைந்த அவர் புலம்பிக் கொண்டே இருந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு அவரது உடல் அங்குள்ள கீழ கொண்டயம் பேட்டை தண்டவாளத்தில் மீட்கப்பட்டது. திருச்சி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். தற் கொலை செய்து கொண்ட செல்வராஜிற்கு சரண்யா என்ற மனைவியும் 2 வயதில் குழந்தையும் உள்ளது.

    Next Story
    ×