search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘கஜா’ புயல் கரையை கடந்த போது புதுவையில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை
    X

    ‘கஜா’ புயல் கரையை கடந்த போது புதுவையில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை

    கஜா புயல் கரையை கடந்த போது புதுவையில் பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. #gajacyclone #heavyrain #rain

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கஜா புயலாக உருவெடுத்தது. இந்த புயல் நாகை அருகே கரையை கடக்கும் என்றும், அந்நேரத்தில் பலத்த காற்றோடு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து புதுவை அரசு சார்பில் கஜா புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தாழ்வான பகுதி மக்களை தங்க வைக்க சமுதாயக்கூடம், அரசு பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டது. பாதிப்புகளை தெரிவிக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர் ஷாஜகானும் நகர பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். அரசுத் துறை அலுவலகங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

    அரசு பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. இரவு 8 மணிக்கு மேல் கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் 4.30 மணிக்கே பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது.

    புயல் எதிரொலியாக நேற்று மதியம் கடற்கரை சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. காலை முதல் கடல் அலைகளில் சீற்றம் இருந்தது. வழக்கத்தை விட இருமடங்கு அலைகளின் உயரம் இருந்தது. துறைமுகத்தில் 9-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடலில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

    நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. 10 நிமிடம் பெய்த மழை தொடர்ந்து நீடிக்கவில்லை. மேகக்கூட்டங்களின் சுழற்சியால் அவ்வப்போது வெளிச்சமும், மீண்டும் மழையும் பெய்தது.

    கடற்கரை சாலையில் புயல் சீற்றத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.

    புயலையொட்டி மாலையில் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் இரவு 8 மணிக்கு மேல் பூட்டப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.

    சில தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் கிராமங்களில் இருந்து புதுவைக்கு வந்து பணிபுரிபவர்களும், பயணிகளும் அவதிப்பட்டனர். பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

    குளிர்ந்த காற்று வீசினாலும் பெருமழை பெய்யவில்லை. ஆனால் இன்று அதிகாலை 1.30 மணிக்கு பலத்த வேகத்துடன் சூறாவளி காற்று வீசியது. அவ்வப்போது மழையும் பெய்தது. நகர பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும் பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. நகர பகுதியில் பேனர்கள் அகற்றப்பட்டிருந்ததால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால் வியாபார நிறுவனங்களின் பெயர் பலகைகள் பெயர்ந்து விழுந்தது.

    லப்போர்த் வீதியில் ஒரு மரம் பெயர்ந்து விழுந்தது. அது உடனடியாக அகற்றப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்யாததால் மழைநீர் எங்கும் தேங்கவில்லை. வழக்கமாக மழைநீர் தேங்கும் பாவாணர் நகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர் பகுதிகளில் கூட தண்ணீர் தேங்கவில்லை. இன்று அதிகாலை 6மணியளவில் ஒவ்வொரு பகுதியாக மின் இணைப்பு தரப்பட்டது.

    புயல் காரணமாக இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக நடத்தப்பட வேண்டிய பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் வானம் இருண்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் 5 செமீ மழை புதுவையில் பதிவாகியுள்ளது. அதிகாலை வீசிய சூறாவளி காற்றால் நகரபகுதிகள் முழுவதும் கிளைகள் முறிந்தும், கிளைகள், பூக்கள், குப்பை, கூளமாக கிடக்கிறது.

    இந்த குப்பைகளை அகற்றும் பணிகளில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருவார காலமாக மிரட்டி வந்த ‘கஜா’ புயல் புதுவையில் பெரும் சேதத்தை விளைவிக்காமல் கடந்து சென்றுள்ளது அரசையும், மக்களையும் நிம்மதி பெருமூச்சடைய வைத்துள்ளது. #gajacyclone #heavyrain #rain

    Next Story
    ×