search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறில் கஜா புயல் மழையால் வீட்டின் சுவர் இடிந்து சிறுமி பலி
    X

    செய்யாறில் கஜா புயல் மழையால் வீட்டின் சுவர் இடிந்து சிறுமி பலி

    கஜா புயல் காரணமாக பெய்த மழையால் செய்யாறில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். #GajaCyclone #Gajastorm
    செய்யாறு:

    கஜா புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை செய்தது.

    வந்தவாசி, செய்யாறு பகுதியில் காற்றுடன் மழை பெய்தது. வந்தவாசியில் அதிகபட்சமாக 76 மில்லி மீட்டர் மழை பெய்தது. செய்யாறு, சேத்துப்பட்டு, கீழ்பென்னாத்தூர், சாத்தனூர்அணை பகுதியில் பலத்த மழை கொட்டியது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது. புயல் மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன, மின்சாரம் பாதிக்கப்பட்டது.

    செய்யாறு அருகே உள்ள வடமனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி (வயது 45) கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி மகள்கள் பிரியதர்ஷினி (15) அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.பிரியாமணி (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறார். தமிழ் பிரியா (3).

    இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு 7 மணி முதல் கஜா புயல் காரணமாக மழை விட்டு விட்டு பெய்தது. நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது.

    இதன் காரணமாக குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் அனைவரும் சிக்கினர். சுவர் மேல் விழுந்ததில் துளசியின் 2-வது மகள் பிரியாமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    காயமடைந்த மற்ற 4 பேரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். படுகாயமடைந்த துளசி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    அவரது மனைவி லட்சுமி, மகள்கள் பிரியதர்ஷினி, தமிழ்பிரியா ஆகியோர் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    மோரணம் போலீசார் பலியான சிறுமியின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GajaCyclone #Gajastorm



    Next Story
    ×