search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் கஜா புயல் சூறாவளி காற்றுடன் கனமழை
    X

    திண்டுக்கல்லில் கஜா புயல் சூறாவளி காற்றுடன் கனமழை

    திண்டுக்கல்லில் கஜா புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்தத்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.#Gajastorm

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் கஜா புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்தத்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழக மக்களை மிரட்டி வந்த கஜாபுயல் நேற்று இரவு கரையை கடந்தது. இதனால் கரையோர மாவட்டங்களில் கடுமையான புயல், மழை ஏற்பட்டது. தற்போது அந்த புயல் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பெரியகுளம், கொடைக்கானல் வழியாக மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

    திண்டுக்கல்லில் நேற்று இரவு முதலே சாரல்மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. இதனால் நகரின் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காலை முதலே மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. பல பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் தீப்பிடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    திண்டுக்கல் நகர் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்நிலையத்தில் இருந்து குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கியதால் மின்வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேற்கூரைகள் சூறாவளி காற்றுக்கு பறந்து சாலையின் நடுவே விழுந்தது. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    திண்டுக்கல் நகரில் காலை முதலே விட்டுவிட்டு பெய்துவந்த மழை பின்னர் இடைவிடாது கனமழையாக அதிகரித்து கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அனைத்து சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற ஒருசில வாகனங்களும் தத்தளித்தவாறு சென்றன.

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6 மரங்கள் முறிந்து விழுந்தது. இதேபோல் அரசு ஆஸ்பத்திரி உள்பட அனைத்து இடங்களிலும் மரங்கள் முறிந்து கிடந்தது. அவை உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை.

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புயல் சேத விபரங்களை அறிந்து கொள்ள 7598566000 என்ற வாட்ஸ்அப் எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1077 என்ற இலவச கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டு அலுவலர்கள் முழுவீச்சில் கண்காணித்து வருகின்றனர். வெள்ள சேதம், பாதிப்பு குறித்து தகவல் அறிந்தால் 9543253741, 9597939660, 8825417246 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் அருகில் உள்ள கிளாவரையில் இருந்து இன்று காலை 30 பயணிகளுடன் அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பூம்பாறை அருகே சாலைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அந்த பஸ் சிக்கி கொண்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பஸ் நகரமுடியவில்லை. அதே நேரத்தில் கொடைக்கானலில் இருந்து மேல்மலை கிராமத்திற்கு வந்த பஸ்சும் மேலே செல்ல முடியாமல் 100 மேற்பட்ட பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    2 மணிநேரத்திற்கு மேலாக மழையில் சிக்கிய அவர்களை ஜீப் மற்றும் 4 சக்கர வாகனங்கள் மூலம் மீட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். #Gajastorm

    Next Story
    ×