search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டுமே காரணமல்ல - ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
    X

    நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டுமே காரணமல்ல - ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

    தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. #ThoothukudiSterlite #CentralGovernment #ChennaiHighCourt
    சென்னை:

    தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற அறிக்கையை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் தமிழக அரசின் விருப்பம் என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த அறிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ளது சட்ட விரோதம் என்று கூறப்பட்டிருந்தது.

    மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே முழு அளவில் ஆய்வு நடத்தி நிலத்தடி நீர் மாசு அடைந்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் தான் காரணம் என உறுதி செய்யப்பட்டதாலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.



    இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய அரசின் அறிக்கையை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாதது தமிழக அரசின் விருப்பம் என மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

    மேலும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தான் விசாரிக்க முடியும் என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் அவர் வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். #ThoothukudiSterlite #CentralGovernment #ChennaiHighCourt
    Next Story
    ×