search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல்- சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    குட்கா ஊழல்- சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர், டிஜிபி பெயர்கள் இடம்பெறவில்லை. #gutkhascam #cbi #ministervijayabaskar

    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் இதில் அடிபட்டன.

    குட்கா குடோனில் சோதனை நடந்த போது புழல் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் பெயரும் குட்கா விவகாரத்தில் சிக்கியது. இதன் காரணமாக குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றே எதிர் பார்க்கப்பட்டது.


    ஆனால் குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் ஆகியோரே கைது செய்யப்பட்டனர். 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக போலீசார் மீது சி.பி.ஐ.யின் பாய்ச்சல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதனை உறுதி செய்யும் வகையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தபட்டது.

    இதன் தொடர்ச்சியாக அவர்கள் மீது கண்டிப்பாக மேல் நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சோதனை முடிந்த பின்னர் போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. இன்ஸ்பெக்டர் சம்பத் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சம்பத், முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இதற்கு விளக்கம் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக கோர்ட்டில் பதில் அளித்த சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் சம்பத் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தது. இதனால் முன்ஜாமீன் தேவை இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் விசாரணை முடிந்த பின்னர் அதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    குட்கா ஊழல் வழக்கில் போலீஸ் துறையினர் மீதே சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

    ஆனால் அது தொடர்பாக எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததும், குற்றப்பத்திரிகையில் யாருடைய பெயரும் சேர்க்கப்படாமல் இருப்பதும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #gutkhascam #cbi #ministervijayabaskar

    Next Story
    ×